HomeTop news2026 முதல் 8 மாதங்களில் அரசின் வரி வருவாய் ரூ.3,684 பில்லியன்

2026 முதல் 8 மாதங்களில் அரசின் வரி வருவாய் ரூ.3,684 பில்லியன்

2026ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் 8 மாதங்களில், அரசின் வரி வருமானம் 3,684 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 20 சதவீத வளர்ச்சியாகும்.

2026ஆம் ஆண்டுக்கான அரசின் ஒட்டுமொத்த வரி வருமான இலக்கான 4,910 பில்லியன் ரூபாயில், முதல் 8 மாதங்களிலேயே 75 சதவீதம் திரட்டப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் அரசின் மொத்த வருமானம் 4,002.3 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளதுடன், இதில் 92 சதவீதம் வரி வருவாய் மூலமும், 8 சதவீதம் வரியற்ற வருவாய் மூலமும் கிடைத்துள்ளது.

வரி வருமானத்தில் மிகப்பெரிய பங்காகப் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகள் (59%) விளங்குகின்றன. இதில் வருமான வரி 21 சதவீதமாகவும், வெளிநாட்டு வர்த்தக வரிகள் 12 சதவீதமாகவும் பதிவாகியுள்ளன.

தனித்தனியாக நோக்குமிடத்து, பெறுமதி சேர் வரி (VAT) வருமானம் 22 சதவீதம் அதிகரித்து 1,322.7 பில்லியன் ரூபாயாகவும், வருமான வரி 18 சதவீதம் அதிகரித்து 825.6 பில்லியன் ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.

இலங்கை சுங்கத்தின் வருவாயும் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக, மோட்டார் வாகனங்கள் மீதான சுங்க வரி 76.5 பில்லியன் ரூபாயால் அதிகரித்து 347 பில்லியன் ரூபாயை எட்டியுள்ளது. சுங்கம் திரட்டிய வரியில் 61 சதவீதம் மோட்டார் வாகனங்கள் மூலமே கிடைத்துள்ளது.

மொத்த வரி வருவாயில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (47% – ரூ. 1,728 பில்லியன்) மற்றும் இலங்கை சுங்கம் (47% – ரூ. 1,727 பில்லியன்) ஆகிய இரண்டும் சம அளவிலான பங்களிப்பை வழங்கியுள்ளன.

மதுவரித் திணைக்களம் 182 பில்லியன் ரூபாயைத் திரட்டியுள்ளது.

இந்த வலுவான வரி வருவாய் வளர்ச்சி காரணமாக, 2025ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் காணப்பட்ட 411 பில்லியன் ரூபாய் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு மாறாக, 2026ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் 35.4 பில்லியன் ரூபாய் வரவு-செலவுத் திட்ட உபரி (Budget Surplus) பதிவாகியுள்ளதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular