ஆஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், 21 மில்லியன் ரூபாய் மதிப்பிலான குற்றவியல் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை குற்றமற்றவர் எனக் கூறி கொழும்பு உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ண முர்ஃபுருதுகுட முன்னிலையில் நீண்டகாலமாக இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் இன்று இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை அறிவித்த நீதிபதி, உதய கம்மன்பிலவுக்கு எதிராக அரசுத் தரப்பினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பிரதிவாதியான உதய கம்மன்பில அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, குற்றமற்றவர் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
