HomeTop newsஎல்ல சுற்றுலாத்துறையை மேம்படுத்த ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்

எல்ல சுற்றுலாத்துறையை மேம்படுத்த ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்

எல்லப் பகுதியின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 1,000 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய பல பிரமாண்ட அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எல்ல ‘Waterfall Road’ வீதியை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சுமார் 26 ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் இருந்ததும், பெருந்திரளான சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்துவதுமான இவ்வீதி, கொன்கிரீட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

இதுதவிர, 500 மில்லியன் ரூபாய் செலவில் துன்ஹிந்த – பல்லகெட்டுவ – தெமோதர வீதியும், 370 மில்லியன் ரூபாய் செலவில் எல்ல – பசறை வீதியும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், கந்தேகும்புற வீதி 270 மில்லியன் ரூபாயிலும், பியரபந்தோவ வீதி 59 மில்லியன் ரூபாயிலும் அபிவிருத்தி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சர் ருவன் ரணசிங்க குறிப்பிட்டார்.

அத்துடன், உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு மேலதிகமாக எல்ல நகரத்தின் சுற்றுலா ஈர்ப்பை அதிகரிப்பதற்காக பல புதிய அபிவிருத்தித் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, எல்ல நகரப் பிரவேசத்திற்காக புதிய சுரங்கப் பாதை ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், நகர மத்தியில் அமைந்துள்ள 2.5 ஏக்கர் RDA காணியை நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரசபையின் 50 மில்லியன் ரூபாய் ஆரம்ப நிதி ஒதுக்கீட்டின் கீழ் நவீன சுற்றுலா வளாகம், வணிக மையம் மற்றும் கண்காட்சி அரங்கு உள்ளிட்ட பகுதியாக அபிவிருத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

எல்ல நகரத்தில் காணப்படும் பிரதான பிரச்சினையான குப்பைக் மேடு, எதிர்வரும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் முழுமையாக அகற்றப்பட்டு அப்பகுதி அழகமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக பிரதேச சபை மற்றும் இராணுவத்தினரின் உதவியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்காக வெல்லவாய ஆனபல்லம பகுதியில் 10 மில்லியன் ரூபாய் செலவில் புதிய குப்பை கொட்டும் இடம் அமைக்கவும், குப்பைகளை கொண்டு செல்வதற்காக மேலும் 10 மில்லியன் ரூபாவை ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular