HomeTop newsஅதிக வெப்பம் மற்றும் கனமழை - சிறுவர்களின் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை

அதிக வெப்பம் மற்றும் கனமழை – சிறுவர்களின் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் ஏனைய பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்டுள்ள வானிலை மாற்றங்களால், சிறுவர்களிடையே இரு வேறு வழிகளில் நோய்கள் பரவுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகச் சிறுவர் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக சிறுவர்கள், பெரியவர்கள் மட்டுமன்றி கர்ப்பிணித் தாய்மார்களும் நீர்ச்சத்து இழப்பிற்கு உள்ளாகக்கூடிய வாய்ப்புள்ளதால், அதிகளவில் நீரைக் குடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக, சாதாரண முதியவர் ஒருவர் நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 3 லீட்டர் நீரையேனும் அருந்துவது பொருத்தமானது என்பதுடன், சிறுவர்களுக்கு நீரைக் கொடுக்கும் போது அவர்களின் உடல் எடைகளுக்கு ஏற்ப நீரை வழங்கப் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

நீண்டகாலமாகப் போதுமான அளவு நீரைக் குடிக்காமல் இருப்பதனால் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளமை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நீரைக் குடிக்காமல் திறந்தவெளிகளில் வேலைகளில் ஈடுபடுதல், சுற்றுலாக்கள் செல்லுதல் போன்றவற்றின் காரணமாக வெப்ப அதிர்ச்சி, மயக்கம், வலிப்பு போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும், இது மரணத்தைக் கூட ஏற்படுத்தக்கூடிய கடுமையான ஒரு நிலை என்றும் வைத்தியர் கூறினார்.

எனவே வீட்டை விட்டு வெளியே செல்லும் சந்தர்ப்பங்களில் நீர் போத்தல் ஒன்றை உடன் எடுத்துச் செல்லுமாறும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

இக்காலகட்டத்தில் வயிற்றுப்போக்கு பரவுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் நிலவுவதால், எப்போதும் சிறுவர்களுக்குப் சுத்தமான குடிநீரையும் சுத்தமான உணவுகளையும் மட்டுமே வழங்கப் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.

சிறுவர்களுக்குச் செயற்கை பானங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை வழங்குவதைத் தவிர்க்குமாறும், அதற்குப் பதிலாக எலுமிச்சை, தோடம்பழம், இளநீர், கஞ்சி வகைகள் மற்றும் சூப் போன்ற இயற்கை திரவ உணவுகளை அருந்த ஊக்குவிக்குமாறும் வைத்தியர் இங்கு அறிவுறுத்தினார்.

இதனிடையே, சிறுவர்கள் கைபேசிகளைப் பயன்படுத்தி நேரத்தைக் கழிப்பதற்கு இடமளிக்காமல், அவர்களைப் பல்வேறு உடற்பயிற்சி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்துமாறும் சிறுவர் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா பெற்றோரிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular