HomeTop newsமுகாமைத்துவ பலவீனங்களை நிவர்த்தி செய்து, சந்தைப் பங்கை அதிகரிக்கச் புதிய சட்டமூலம்

முகாமைத்துவ பலவீனங்களை நிவர்த்தி செய்து, சந்தைப் பங்கை அதிகரிக்கச் புதிய சட்டமூலம்

இலங்கை போன்ற சிறிய சந்தை வாய்ப்பு உள்ள நாட்டில், பொருள்கள் மற்றும் சேவைகளின் கட்டுப்பாடு, வெறும் போட்டித்தன்மையின் அடிப்படையில் மாத்திரம் இடம்பெறும் என எதிர்பார்க்க முடியாது என்றும் அதற்காக அரசாங்கத்திடம் வலுவான விலைக்கட்டுப்பாட்டுப் பொறிமுறை இருக்க வேண்டும் என்றும் அதற்காக லங்கா ச.தொ.ச மற்றும் கூட்டுறவு முறைமையை மேலும் வலுப்படுத்தி அதன் முக்கிய பங்காளியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (14) நடைபெற்ற வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மூலம் 2026 ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு – செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்கள், சுய-நிதியளிப்பு மூலம் செயற்படும் நிறுவனங்கள் மற்றும் திறைசேரியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயற்படும் நிறுவனங்கள் ஆகிய 16 நிறுவனங்கள் ஊடாக, இந்நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றமும் இதன்போது விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.

விவசாயிகளின் நெல் மற்றும் தானியங்களை உலர்த்துவதற்காகச் சலுகை அடிப்படையில் இயந்திர உலர்த்திகளை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறையில் உள்ளதுடன், தற்போது 45 இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன எனவும் விண்ணப்பித்த 65 நிறுவனங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 45 நிறுவனங்களுக்கு அந்த இயந்திரம் வழங்கப்படும் என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.

நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் 9 மொத்த விநியோக மையங்களை நிறுவும் திட்டம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், குருநாகல் மற்றும் மாத்தறை மையங்களின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு –  செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 1000 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்படும் கிராமிய மட்டத்திலான அரிசி பதப்படுத்தும்  மையங்களை அமைக்கும் திட்டம், நுவரெலியா உருளைக்கிழங்கு கொள்வனவு மையத்தின் நிர்மாணப் பணிகள் மற்றும் மொனராகலை தானிய அவரைப் பயிர்கள் பதப்படுத்தும் மையத்தின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் ஆகியவற்றை மீளாய்வு செய்த ஜனாதிபதி, பெரிய வெங்காயம் மற்றும் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்காகவும் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இங்கு சுட்டிக்காட்டினார்.

அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகள் இங்கு தனித்தனியாக மீளாய்வு செய்யப்பட்டமையுடன், நிறுவன மட்டத்தில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்குத் தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

இளைஞர் சமூகத்தை இலக்காகக் கொண்டு கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் திட்டத்தின் கீழ், புதிய உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் 34 ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும்  இத்துறைக்கு இளைஞர் சமூகத்தை ஈர்ப்பதே இதன் நோக்கம் என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.

உணவு ஆணையாளர் திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், புதிய களஞ்சியத் தொகுதிகள் மற்றும் சூரிய மின் சக்தி கட்டமைப்புகளை நிறுவும் பணிகளின் முன்னேற்றமும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.

மேலும், கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம், லங்கா சதொச மற்றும் கூட்டுறவு முறைமையை மேலும் பலப்படுத்துவதன் மூலம் சந்தைப் போட்டியை ஏற்படுத்தி, நுகர்வோருக்கு சிறந்த தரமான சேவையை உறுதி செய்வது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சுமார் 2100 கூட்டுறவு, மெகா கோப் சிட்டி மற்றும் கோப் சிட்டி ஆகியவை நாட்டில் உள்ளன எனவும் இதன் மூலம் குறிப்பிடத்தக்க சந்தைப் பங்கை மேம்படுத்திக் கொள்வது தொடர்பாகவும், அதன்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அந்த முகாமைத்துவ பலவீனங்களை நிவர்த்தி செய்வதற்காகச் சட்டம் ஒன்று வகுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular