ஈரானைத் தோற்கடித்த பின்னர், ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிராந்தியமாக விரைவில் அறிவிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் மாநிலத்தில் நடைபெற்ற காவல்துறை பயிற்சி நிலையம் ஒன்றில் இடம்பெற்ற அரசியல் பேரணியில் உரையாற்றியபோதே டிரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரான் தற்போது கடுமையாகத் தோற்கடிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஈரானை தோற்கடித்து முடித்த பின்னர் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிராந்தியமாக அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.
உலகளாவிய எரிசக்தி மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு முக்கியமான கடல்வழிப் பாதையாக ஹார்முஸ் நீரிணை காணப்படுகிறது.
இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஹார்முஸ் நீரிணையின் பெரும்பகுதியில் தனது கட்டுப்பாட்டை ஈரான் நிலைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஹார்முஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
பெரும்பாலான பயணிகள் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்கு ஈரான் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், ஈரானின் பொருளாதார நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில் அமெரிக்க கடற்படை அந்நாட்டின் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் முற்றுகையிட்டுள்ளோம். நாங்கள் விரும்பினால் தவிர எந்தக் கப்பல்களும் உள்ளே வர முடியாது” என டிரம்ப் தனது ஆதரவாளர்கள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் தெரிவித்துள்ளார்.
பிறப்புரிமைக் குடியுரிமை விவகாரம்
இதனிடையே, அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு தானாக அமெரிக்க குடியுரிமை வழங்கும் பிறப்புரிமைக் குடியுரிமையை கட்டுப்படுத்தும் வகையில் டிரம்ப் நிர்வாகம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் 30ஆம் திகதி அந்த நிர்வாக உத்தரவை ரத்து செய்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் குழந்தை பெற்றெடுக்கும் நோக்கத்துடன் விசா கோருபவர்களை கட்டுப்படுத்தும் வகையில், சில நாட்களுக்கு முன்னர் டிரம்ப் இரண்டு புதிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
