கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடைபெற்ற கூட்டத்தின் முழுமையான காணொளிப் பதிவுகளை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி செயலகம் பதிலளித்துள்ளது.
இதற்கமைய, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன பெரேராவின் கையொப்பத்துடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், குறித்த கூட்டத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஆற்றிய உத்தியோகபூர்வ உரைகளின் தொகுக்கப்படாத காணொளிப் பதிவுகள் கடந்த ஓகஸ்ட் 12ஆம் திகதியே சங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனைய தரப்பினரின் கருத்துரைகள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் அடங்கிய காணொளிப் பதிவுகளும் உரிய உத்தியோகபூர்வ நடைமுறைகளுக்கு அமைவாக எதிர்காலத்தில் கூடிய விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த காணொளிப் பதிவுகளை முறையாகவும் சரியான முறையிலும் வழங்குவதற்கு ஜனாதிபதி செயலகத்தின் முழுமையான ஒத்துழைப்பு எப்போதும் வழங்கப்படும் எனவும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
