இந்தோனேசியாவில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 5.9, 5.6 மற்றும் 6.1 ரிக்டர் அளவுகளில் மூன்று தொடர் நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகே இன்று அதிகாலை 3.28 மணியளவில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தொடர் நில அதிர்வுகளைத் தொடர்ந்து, அந்நாட்டின் தேசிய புவியியல் மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்திருந்தது. எனினும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்த பின்னர் அந்த எச்சரிக்கை பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், இந்தோனேசிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட சுனாமி எச்சரிக்கையை கருத்திற்கொண்டு இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களமும் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
அதில், இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதன் தாக்கம் இலங்கைக்கு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, இலங்கைக்கு எவ்வித சுனாமி ஆபத்தும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டின் கடலோரப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதுகாப்பாகத் தொடர்வதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.
