HomeTop newsரயில் நிலைய அதிபர்கள் சங்கம் கடும் எச்சரிக்கை

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் கடும் எச்சரிக்கை

ரயில் சேவையில் நிலவும் நிர்வாக, சேவை மற்றும் கணக்காய்வு செயல்முறைகள் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் இதுவரை சரியான தீர்வுகளை வழங்கவில்லை எனக் கூறி, இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

உரிய கோரிக்கைகளுக்கு நியாயமான காலப்பகுதிக்குள் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், சகோதர ரயில் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி கடும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் அதில் மேலும் எச்சரித்துள்ளனர்.

ரயில் நிலையங்களின் வருகை மற்றும் புறப்பாட்டை பரிசோதிப்பது கணக்காய்வு செயல்முறையின் ஒரு பகுதி மட்டுமே என சுட்டிக்காட்டும் சங்கம், பல வருடங்களாக சரியான கணக்காய்வுக்கு உட்படுத்தப்படாத ரயில் நிலையங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், பரீட்சைகள் மற்றும் நேர்முகப்பரீட்சைகள் நடத்தப்பட்ட போதிலும், மாவட்ட போக்குவரத்து பரிசோதகர் பதவிகளுக்கான நியமனங்கள் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தாமதப்படுத்தப்பட்டுள்ளதால், ஒழுக்காற்று விசாரணைகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிர்வாக நடவடிக்கைகள் தேங்கிக் கிடப்பதாக அச்சங்கம் குற்றம் சுமத்துகிறது.

ரயில் நிலைய அதிபர் சேவைக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் சேவைப் பிரமாணக்குறிப்பு மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பான இடைக்கால ஏற்பாடுகள் மேலும் தாமதமடைவது பாரிய பிரச்சினையாகும் எனவும், சேவை காலங்கள் குறைப்பு போன்ற நடவடிக்கைகளின் போது ரயில் நிலைய அதிபர் சேவையை மட்டும் நியாயமற்ற முறையில் இலக்கு வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

நாளுக்கு நாள் சீர்குலைந்து வரும் ரயில் சேவைகள், உட்கட்டமைப்பு வசதிகளில் உள்ள பிரச்சினைகள், பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள ரயில் வளங்கள், சேவைத் தேவைகளுக்கு போதிய நிதியொதுக்கீடு கிடைக்காமை மற்றும் திணைக்களத்திற்குச் சொந்தமான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வளங்கள் சரியாகப் பயன்படுத்தப்படாமை குறித்தும் சங்கத்தின் தீவிர அவதானம் திரும்பியுள்ளது.

இந்தப் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புள்ள அதிகாரிகளிடம் பல சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை திருப்திகரமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு நம்பகமான மற்றும் திறமையான ரயில் சேவையை வழங்குவதற்குத் தேவையான நிர்வாக மற்றும் சேவைத் தீர்மானங்களை விரைவாகப் பெற்றுக்கொள்வதே தமது ஒரே நோக்கம் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular