நாட்டின் ஆட்சியாளர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் தர்மத்தின் வழியில் அறிவுரைகளையும் அநுசாசனங்களையும் வழங்குவது முற்காலம் தொட்டே இடம்பெற்று வரும் நடைமுறையாகும் என மல்வத்து மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், நீதிபதிகளின் சேவைக் காலத்தை நீடிப்பது தொடர்பாக முப்பீட மகாநாயக்க தேரர்கள் தமது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்த போதிலும், அந்தக் கடிதம் தொடர்பில் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என மல்வத்து மகா விகாரையின் மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரர் கவலை தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (12) கண்டிக்கு சென்று மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கோ அல்லது நாட்டின் ஆட்சியாளர்களுக்கோ கடிதம் அனுப்பும்போது, வழக்கமாக அக்கடிதம் கிடைத்தமைக்கான பதில் வழங்கப்படுவது நடைமுறை என அவர் குறிப்பிட்டார்.
ஆனால், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது தொடர்பான விவகாரத்தில் முப்பீட மகாநாயக்க தேரர்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்து அனுப்பப்பட்ட கடிதம் கிடைத்ததா என்பதுகூட இதுவரை அறிவிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், அவை தொடர்பில் மகா சங்கத்தினர் நாட்டின் ஆட்சியாளர்களுக்கு தர்மத்தின் அடிப்படையில் அறிவுரைகளை வழங்குவது மன்னர்களின் ஆட்சிக் காலத்திலிருந்தே இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டில் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கக்கூடிய கொள்கைகள் உருவாக்கப்படாமையே தற்போதைய பல பிரச்சினைகளுக்குக் காரணம் எனவும் மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
ஒரு அரசாங்கம் உருவாக்கும் கொள்கைகளை அடுத்து வரும் அரசாங்கம் மாற்றுவது அல்லது இரத்து செய்வது தொடர்ச்சியாக இடம்பெறுவதால், நாடு முன்னேற்றமடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி முறை தொடர்பிலும் கவலை
நாட்டின் கல்வி முறை தொடர்பிலும் கருத்து தெரிவித்த மகாநாயக்க தேரர், தற்போதைய கல்வி முறையில் பல்வேறு குழப்பங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் சிறுவயதிலிருந்தே தனியார் மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் மேலதிக வகுப்புகள் இடம்பெறுவதால் பௌத்த ஞாயிறு பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் முன்னேற்றத்திற்கேற்ப நவீன கல்வி அவசியமானது என்றாலும், அதேவேளை நாட்டின் நற்பண்புகள், ஒழுக்கம், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்கள் தொடர்பான அறிவையும் எதிர்கால சந்ததியினருக்கு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், சந்தையில் காணப்படும் பெரும்பாலான உணவுப் பொருட்களின் தரம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இந்த விடயம் தொடர்பில் பொறுப்புடைய தரப்பினரிடம் பலமுறை தெரிவித்தும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் விவசாய சமூகத்தினர் தற்போது பாரதூரமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும், அவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடினால் நாட்டின் உண்மையான நிலைமையை அறிந்துகொள்ள முடியும் எனவும் மகாநாயக்க தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
