இலங்கையின் சிறைகளில் நிலவும் அதிகளவிலான கைதிகள் நெரிசலைக் குறைப்பதற்காக, சட்டச் சீர்திருத்தங்கள் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான மாற்று தண்டனை முறைகள் குறித்து அரசு கவனம் செலுத்தி வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
புதிய பூகொட நீதிமன்ற வளாகத்தை திறந்து வைத்து உரையாற்றிய அமைச்சர், நாட்டின் சிறைகளில் 10,375 கைதிகளை மட்டுமே தங்க வைக்கும் கொள்ளளவு காணப்படுகின்ற போதிலும், தற்போது அதைவிட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் சிறைகளில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இதனால், பொருத்தமான வழக்குகளில் சிறைத்தண்டனைக்கு மாற்றாக ‘வீட்டுக் காவல்’ (House Arrest) உள்ளிட்ட தொழில்நுட்ப உதவியுடன் கூடிய மாற்று நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
சிறைகளில் நிலவும் நெரிசலுக்கு அரச பகுப்பாய்வாளர் திணைக்கள அறிக்கைகள் தாமதமாக வெளியிடப்படுவதும் முக்கிய காரணமாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், அந்த அறிக்கைகளை விரைவாக வழங்குவதன் மூலம் விளக்கமறியல் கைதிகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க முடியும் என்றார்.
அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் செயல்திறனை அதிகரிப்பதற்காக மாதத்திற்கு 1,500 முதல் 2,000 அறிக்கைகளை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குத் தேவையான மனிதவளம் மற்றும் வசதிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இலங்கை நீதித்துறை எதிர்நோக்கும் முக்கிய சவால்களில் ஒன்று நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் தேக்கம் என தெரிவித்த நாணயக்கார, அவற்றை நீதிபதிகள் கையாளக்கூடிய அளவிற்கு விரைவாகக் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளதாக குறிப்பிட்டார்.
வளர்ந்த நாடுகளில் 10 இலட்சம் மக்களுக்கு 40 முதல் 60 நீதிபதிகள் உள்ள நிலையில், இலங்கையில் அதே எண்ணிக்கையிலான மக்களுக்கு சுமார் 10 நீதிபதிகள் மட்டுமே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிலுவை வழக்குகளை குறைப்பதற்காக பிரதம நீதியரசரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஆதரவளித்து வருவதாகவும், அதிக வழக்குகள் தேங்கியுள்ள கொழும்பில் நீதிமன்ற வசதிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை குறிப்பிட்ட அவர், நீதித்துறை மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளுக்கு சில தரப்புகள் சவால்களை ஏற்படுத்தி வருவதாகவும், அவற்றை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை, புதிதாக திறக்கப்பட்ட மூன்று மாடி பூகொட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம், சட்ட உதவி மையம், சமூக சீர்திருத்த அலுவலகம் மற்றும் நன்னடத்தை அலுவலகம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.
2018 ஆம் ஆண்டு ரூ.441 மில்லியன் மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், நிறைவடையும் போது ரூ.882.5 மில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்திற்காக சுமார் ரூ.585 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட கட்டுமானப் பணிகள், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், இலங்கையின் ‘e-Court’ டிஜிட்டல் நீதிமன்றத் திட்டத்தின் கீழ் மின்னணு வழக்கு முகாமைத்துவ அமைப்பு இந்த நீதிமன்ற வளாகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒலி-ஒளி சான்றுகளை கையாளும் நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
திறமையானதும் பயனுள்ளதுமான நீதிமுறையை உருவாக்குவதற்கும், சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கும் நீதித்துறை மற்றும் சட்டத் துறையினருடன் இணைந்து அரசு தொடர்ந்து செயற்படும் என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
