உலகின் ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டு விழாக்களுக்கு அடுத்தபடியாக நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு விழாவான 23 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா இன்று (23) ஆரம்பமாகிறது.
23 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா இன்று முதல் ஒகஸ்ட் 02 ஆம் திகதி வரை ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெறவுள்ளது.
2014 ஆம் ஆண்டிற்குப் பின்னர், பொதுநலவாய விளையாட்டு விழாவொன்றை ஸ்கொட்லாந்து நடத்தும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இம்முறை விளையாட்டு விழாவில் 74 நாடுகள் பங்கேற்கவுள்ளதுடன், சுமார் 3,000 விளையாட்டு வீரர்கள் இப்போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இம்முறை போட்டிகளுக்கான செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விளையாட்டு நிகழ்வுகளின் எண்ணிக்கை 10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், கிளாஸ்கோ நகரின் 8 மைல் எல்லைக்குள் அமைந்துள்ள 4 பிரதான விளையாட்டுத் தொகுதிகளில் இந்தப் பொதுநலவாய விளையாட்டு விழாவை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
23 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 40 விளையாட்டு வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளதுடன், அவர்கள் 7 விளையாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.
