கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நேற்று (08) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்து, அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மதஸ்தலங்கள் மற்றும் சமய உயர்பீடங்களுடன் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் சந்திப்புகளின் ஒரு பகுதியாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில், ஜம்இய்யத்துல் உலமா சார்பில் பதில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், உப தலைவர்கள், உப பொதுச் செயலாளர்கள் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டு எதிர்க்கட்சி சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, லசந்த அழகியவண்ண, மஹிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா மற்றும் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சந்திப்பில் வரவேற்புரையாற்றிய ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், அமைப்பின் நாடளாவிய செயற்பாடுகள் மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய கூட்டு எதிர்க்கட்சித் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தமது கூட்டணியின் நோக்கங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகளை அறிமுகப்படுத்தியதுடன், நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரும் புரிந்துணர்வுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதன்போது, நாட்டின் முஸ்லிம் சமூகத்தினர் கடந்த காலங்களில் எதிர்கொண்ட சவால்களுக்கு நிலையான தீர்வுகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஜம்இய்யத்துல் உலமா சுட்டிக்காட்டியது. அதேவேளை, ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தின் மக்கள் நல வேலைத்திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்குவதுடன், அரசியலமைப்பிற்கு அமைவாக தமது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், அரசியல் இலாபத்திற்காக வெறுப்புப் பேச்சுகள் மற்றும் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடுகளை எந்த அரசியல் கட்சியும் ஊக்குவிக்கக் கூடாது என ஜம்இய்யத்துல் உலமா வலியுறுத்தியது.
இறுதியாக, ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்ட சிங்கள மொழிபெயர்ப்பிலான அல்-குர்ஆன் பிரதியை பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிடம் அமைப்பின் பிரதிநிதிகள் வழங்கினர்.






