HomeTop newsஅபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்ட இரு குற்றக் கும்பல் உறுப்பினர்கள் கைது

அபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்ட இரு குற்றக் கும்பல் உறுப்பினர்கள் கைது

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் தங்கியிருந்தபோது அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று (13) இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மோதர நிபுண’ என்பவரின் சகோதரரான ‘மோதர சதுர’ மற்றும் ‘புளுமெண்டல் சங்க’ என அழைக்கப்படும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 வயதான ‘மோதர சதுர’ மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு எதிராக 2019ஆம் ஆண்டு கஞ்சா வைத்திருந்தமை, 2020ஆம் ஆண்டு தடியடி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவரைக் காயப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு எதிராக பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ‘புளுமெண்டல் சங்க’ என அழைக்கப்படும் மற்றைய சந்தேகநபர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக 2010ஆம் ஆண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு கொலைச் சம்பவம் ஒன்றிலும் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

மேலும், 2016ஆம் ஆண்டு மாளிகாவத்தை பகுதியில் சிறைச்சாலை பேருந்து மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தமை, ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டமை மற்றும் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு கொலை மற்றும் காயப்படுத்தல் சம்பவங்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளும் அவருக்கு எதிராக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு சந்தேகநபர்களிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular