HomeTop newsசிறுவர்களிடையே டெங்கு, இன்ஃப்ளூயன்சா உள்ளிட்ட நோய்கள் பரவல்

சிறுவர்களிடையே டெங்கு, இன்ஃப்ளூயன்சா உள்ளிட்ட நோய்கள் பரவல்

தற்போது சிறுவர்களிடையே சில நோய்கள் பரவி வருவதால் பெற்றோர் அது குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா  தெரிவித்துள்ளார்.

டெங்கு, இன்ஃப்ளூயன்சா, கை, கால் மற்றும் வாய் நோய், மற்றும் மெனிஞ்சைடிஸ் ஆகிய நோய்கள் தற்போது சிறுவர்களிடையே பரவி வருவதைக் காணக்கூடியதாக உள்ளதாக விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இந்நோய் நிலைமைகள் குறித்து விழிப்புடன் இருந்து, இந்நோய்களுக்கு ஆளாவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும் என்றும் விசேட வைத்திய நிபுணர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அங்கு டெங்கு நோய் பற்றிக் குறிப்பிடுகையில், அது ஒரு உயிராபத்தான நோய் என்றும் காய்ச்சல், தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, உடல் வலி, மூட்டு வலி மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளைக் காண முடியும் என்றும், 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் காணப்பட்டால் அது குறித்து அவதானமாக இருக்குமாறும் விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டார்.

இன்ஃப்ளூயன்சா நோய் பற்றிக் குறிப்பிடுகையிலும் காய்ச்சலுடன் இருமல், தடிமன், உடல் வலி, மூட்டு வலி போன்ற அறிகுறிகளைக் காண முடியும் எனச் சுட்டிக்காட்டிய விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, இருமல், தடிமனுடன் காய்ச்சல் காணப்பட்டால் பிள்ளைகளை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

அத்துடன், இந்நோய் காணப்பட்டால் பிள்ளைகளுக்கு ஓய்வளிப்பது மிகவும் பொருத்தமானது எனச் சுட்டிக்காட்டிய வைத்தியர், பிள்ளைகளைப் பாடசாலைகள் அல்லது முன்பள்ளிகள், பகல்நேர பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்பும்போது முகக்கவசம் அணிவிக்குமாறும், அதன் மூலம் மற்றைய தரப்பினருக்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், தற்போது சிறுவர்களிடையே கை, கால் மற்றும் வாய் நோய் பரவி வருவதைக் காணக்கூடியதாக உள்ளதாகச் சுட்டிக்காட்டிய விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, அந்த நோயின் அறிகுறிகளாக கால்கள், முழங்கைகள், வாய் சார்ந்த பகுதிகளில் சிவப்புப் புள்ளிகள் மற்றும் சில வேளைகளில் வெள்ளை நிற நீர் கொப்புளங்கள் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டார்.

இந்நோய்க்கான காரணி Coxsackievirus எனப்படும் வைரஸ் எனச் சுட்டிக்காட்டிய விசேட வைத்திய நிபுணர், இந்நோய் பாதிக்கப்பட்ட ஒரு பிள்ளையின் உடல் மற்றுமொரு பிள்ளையின் உடலில் படுவதன் மூலம் அந்தப் பிள்ளைக்குப் பரவுகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்த அறிகுறிகளைக் கொண்ட பிள்ளைகளை 3-4 நாட்கள் வீட்டில் வைத்திருக்குமாறும், தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்குமாறும் விசேட வைத்திய நிபுணர் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், தற்போது சிறுவர்களிடையே மெனிஞ்சைடிஸ் நோய் பரவி வருவதாகவும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்குக் காரணம் ஒரு வைரஸின் தாக்கம் என்றும், இதன் அறிகுறிகளாக காய்ச்சலுடன் தலைவலி, வாந்தி, மின் ஒளி அல்லது ஏதேனும் ஒரு வெளிச்சத்தைப் பார்ப்பதில் சிரமம், அதேபோல் சில சமயங்களில் சத்தங்களைக் கேட்பதற்குக் கூட விருப்பமின்மை, உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்படும் என்றும் வைத்தியர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்நோய் செரிமானப் பாதை மற்றும் சுவாசப் பாதை மூலம் பரவுகிறது என்றும், இந்நோய் பரவுவதைக் குறைப்பதற்காக சுத்தமான உணவு, கொதித்தாறிய நீரைப் பருகுதல், இருமல் மற்றும் தடிமன் காணப்பட்டால் முகக்கவசம் அணிவது பொருத்தமானது என்றும் விசேட வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular