Homeஉள்நாடுவெசாக் காலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை கோரிக்கை

வெசாக் காலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை கோரிக்கை

எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அலங்காரங்கள் மற்றும் தன்சல் வழங்கலின் போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மனிதர்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த காலப்பகுதியில் பின்வரும் பொருட்களை விற்பனை செய்வது, காட்சிப்படுத்துவது அல்லது பயன்படுத்துவது அரசாங்கத்தினால் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள்: உறிஞ்சுக்குழாய்கள், கோப்பைகள், தட்டுகள், கரண்டிகள், முட்கரண்டிகள் மற்றும் கத்திகள்
  • உணவுப் பொதியிடல் பொருட்கள்: ரெஜிபோர்ம், உணவுப் பெட்டிகள் மற்றும் லஞ்ச் சீட்
  • அலங்காரப் பொருட்கள்: பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் அனைத்து வகையான பொலிஎத்திலீன் அல்லது பொலிபுரோப்பிலீன் அலங்காரப் பொருட்கள்

2017 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களின் அடிப்படையில், மத மற்றும் கலாசார நிகழ்வுகளில் இத்தகைய பொருட்களைப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என அதிகார சபை எச்சரித்துள்ளது.

மேலும், பிளாஸ்டிக் கழிவுகள் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

  • முறையாக அகற்றப்படாத பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றன
  • இவற்றை உட்கொள்ளும் விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது
  • நுண் பிளாஸ்டிக் மனித உடலுக்குள் செல்வதால் கடுமையான சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்
  • திறந்தவெளியில் பிளாஸ்டிக் எரிப்பதால் நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தில் கலக்கின்றன

எனவே, பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றாடல் நட்பு பொருட்களைப் பயன்படுத்துமாறும், மக்காத கழிவுகளை முறையாக நிர்வகிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular