பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமையைக் கருத்தில் கொண்டு, தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகள் தொடர்ந்தும் தற்காலிகமாக மூடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையில், நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொட தெரிவித்துள்ளார்.
அதன்படி, தெனியாய மத்திய கல்லூரி, தெனியாய ராஜபக்ஷ மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தியூஸ் இருமொழிப் பாடசாலை மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் நாளை (11) மற்றும் நாளை மறுதினம் (12) ஆகிய தினங்களிலும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால், கடந்த 7 ஆம் திகதி முதல் குறித்த பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சுகாதாரப் பிரிவினர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுமாறும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
