கடுகன்னாவ பகுதியில் மேலும் பாறைகள் சரிந்து விழுவதற்கான அபாயம் நிலவுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
நேற்று (10) கடுகன்னாவ பகுதியில் பாறை சரிவு பதிவான இடத்திற்கு மேல் இன்னும் பாறைகள் உள்ளதால், அவை கீழே சரிந்து வருவதற்கான அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கடிகமுவ பகுதியில் புகையிரதப் பாதை தொடர்பிலும் சிக்கலான நிலைமையொன்று நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டு சில பகுதிகளில் பொழியும் திடீர் மழையானது, மண்சரிவு மற்றும் பாறை சரிவு போன்ற அபாய நிலைமைகளை முன்கூட்டியே கணிப்பதைச் சிக்கலாக்கியுள்ளதாக கலாநிதி வசந்த சேனாதீர சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு மழைமானிகளுக்கு (Rain gauges) இடையிலான இடைவெளி 6 முதல் 10 கிலோமீற்றர் வரை இருக்கலாம் என்பதால், இடைப்பட்ட பகுதிகளுக்குக் கிடைக்கும் மழைவீழ்ச்சி குறித்த துல்லியமான தரவுகள் கிடைக்கப் பெறாமை ஒரு சிக்கலாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
கடுகன்னாவையில் பாறை சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவிலுள்ள குருகுத்தல பாடசாலையின் மழைமானியில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியிருக்கவில்லை ஆயினும், பாறை சரிவு நிகழ்ந்த இடத்தில் பொழிந்த மழையின் காரணமாகவே அந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவதானிக்க முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, அபாயகரமான பகுதிகளில் வாழும் மக்கள் நிலவும் நிலைமை குறித்து தொடர்ச்சியாக விழிப்புடன் இருக்குமாறு அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
