இலங்கையின் 1990 சுவசெரிய தேசிய அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 100 புதிய ஆம்புலன்ஸ்களைக் கொள்வனவு செய்வதற்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 1990 சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை, 2018ஆம் ஆண்டு முதல் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்பட்டது.
24 மணி நேரமும் இலவசமாக இயங்கும் இச்சேவை, நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியுள்ளதுடன், நாளொன்றுக்கு சுமார் 1,000 முதல் 1,200 வரையான நோயாளிகளை அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்கிறது.
மேலும், இந்த ஆம்புலன்ஸ் சேவையின் வாகனங்கள் வருடாந்தம் சுமார் 9 மில்லியன் கிலோமீற்றர் தூரம் பயணிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேவையில் தற்போது பயன்பாட்டிலுள்ள 322 ஆம்புலன்ஸ்களிலும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படும் நிலைமை அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, முழுமையான மருத்துவ வசதிகளைக் கொண்ட 100 புதிய ஆம்புலன்ஸ்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு சுகாதாரம் மற்றும் மக்கள் ஊடகத்துறை அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கை 1990 சுவசெரிய அவசரகால ஆம்புலன்ஸ் சேவையின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு விரைவான அவசர மருத்துவ சேவைகளை வழங்குவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
