HomeTop newsஉலகின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பெண்களின் தலைமைத்துவம் - சர்வதேச அரங்கில் பிரதமர் ஹரினி

உலகின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பெண்களின் தலைமைத்துவம் – சர்வதேச அரங்கில் பிரதமர் ஹரினி

பாலின சமத்துவத்தை அடைவதைத் தாண்டி, உலகளாவிய நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு பெண்களின் தலைமைத்துவம் இன்றியமையாதது என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அன்டிகுவா மற்றும் பார்புடாவின் தலைநகர் செயின்ட் ஜான்ஸில் நேற்று (02) நடைபெற்ற காமன்வெல்த் மகளிர் மன்றத்தின் முதலாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல், செழிப்பான மற்றும் மீள்திறன் கொண்ட காமன்வெல்த்தில் முதலீடு செய்தல்” என்ற தொனிப்பொருளில் இந்த மன்றம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், புவிசார் அரசியல் ஸ்திரமின்மை, பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைகள், தொழில்நுட்பம் ஊடாக இடம்பெறும் துஷ்பிரயோகங்கள் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, உலக தெற்கு நாடுகளின் அனுபவங்களையும் கருத்தில் கொண்டு, இத்தகைய சவால்களை எதிர்கொள்வதற்கு நாடுகளுக்கு இடையிலான கூட்டு நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

பெண்கள் அதிகாரம், நிதி மூலதனம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் கட்டமைப்புத் தடைகளை நீக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார்.

மேலும், காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படக்கூடிய தீவு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும், இதற்காக காலநிலை நீதியை உறுதிப்படுத்துவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சமூகங்களால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு மேலதிக கடன் சுமையை ஏற்படுத்தாத வகையில், நேரடி காலநிலை நிதி முதலீடுகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

பெண்களுக்கான உண்மையான சமத்துவத்தை அவ்வப்போது மேற்கொள்ளப்படும் கொள்கை மாற்றங்களால் மாத்திரம் அடைய முடியாது எனக் குறிப்பிட்ட அவர், இதற்காக ஒட்டுமொத்த சமூகத்தின் வலுவான மற்றும் உறுதியான ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்தார்.

அரசாங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், தனியார் துறையினர் மற்றும் ஆண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இந்த மாற்றத்திற்கான செயற்பாட்டுப் பங்காளிகளாக மாற வேண்டும் எனவும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை, பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதையும், காமன்வெல்த் நாடுகளுக்கு இடையிலான கூட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, 14ஆவது காமன்வெல்த் மகளிர் அமைச்சர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.

ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகளையும் வாக்குறுதிகளையும் நடைமுறைச் செயற்பாடுகளாக மாற்றுவதன் மூலம், ஒவ்வொரு பெண்ணினதும் பெண் குழந்தையினதும் செழிப்பு, சுதந்திரம் மற்றும் மீள்திறனை உறுதிப்படுத்த அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் பிரித்தானிய மகாராணி கமிலா, காமன்வெல்த் பிரதிப் பொதுச் செயலாளர், பல்வேறு காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular