HomeTop newsகால்நடை மருத்துவத் துறைக்கு வலுவான ஆதரவு

கால்நடை மருத்துவத் துறைக்கு வலுவான ஆதரவு

2026 ஒக்டோபர் 30 அன்று கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை கால்நடை மருத்துவச் சங்கத்தின் (SLVA) 78ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டத்திலும் மாநாட்டிலும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பொதுச் சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, விலங்கு நலன், நிலையான அபிவிருத்தி ஆகியவற்றுக்குக் கால்நடை மருத்துவத் துறை வழங்கும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அரசாங்கப் பிரதிநிதிகள், கால்நடை மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், சர்வதேசப் பங்காளிகள் ஆகியோர் இந்நிகழ்வில் ஒன்றுகூடினர்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், கால்நடை மருத்துவம் என்பது விலங்குகளின் சுகாதாரப் பராமரிப்புடன் மட்டுப்படுத்தப்படுவதில்லை என்றும், பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாத்தல், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களைத் தடுத்தல், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், விவசாயிகளுக்கு ஆதரவளித்தல், வனவிலங்குகளைப் பாதுகாத்தல் எனத் தேசிய அபிவிருத்தியின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகச் செயற்படுகின்றது என்றும் வலியுறுத்தினார்.

“விலங்குகளின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதிலும் மனிதர்களின் நல்வாழ்வைப் பேணுவதிலும் கால்நடை மருத்துவ நிபுணர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் பங்களிப்பு பொதுச் சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் நிலைபேறு ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது” எனத் தெரிவித்தார்.

இலங்கையின் விவசாயத் துறைக்கு இத்துறை கொண்டுள்ள முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், கால்நடை உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், நோய்களைத் தடுப்பதற்கும், விவசாயச் சமூகங்களின் மீள்திறனை வலுப்படுத்துவதற்கும் கால்நடை மருத்துவச் சேவைகள் அத்தியாவசியமானவை எனக் குறிப்பிட்டார்.

விலங்குகள் மீதான கொடுமைகளுக்கு எதிரான சட்டப் பாதுகாப்புகளை மேம்படுத்துதல், பொறுப்புணர்வுடன் கூடிய விலங்கு உரிமையாண்மை, காயமடைந்த அல்லது ஆபத்திலுள்ள வனவிலங்குகளுக்குப் பயனுள்ள வகையில் விரைந்து செயற்படுதல் ஆகியவற்றின் ஊடாக விலங்கு நலனையும் வனவிலங்குப் பாதுகாப்பையும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

“இந்த முன்னுரிமைகளுக்கு வலுவான, போதிய வளங்களைக் கொண்ட, தொழில்சார் ரீதியாக ஆதரவளிக்கப்படும் ஒரு கால்நடை மருத்துவத் துறை தேவை என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றது” எனக் கூறிய பிரதமர், பொருத்தமான ஆட்சேர்ப்பு மற்றும் நியமனங்கள் மூலம் ஆளணி வெற்றிடங்களுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும், உட்கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், நவீன உபகரணங்களினதும் தொழில்நுட்பத்தினதும் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும் உரையாற்றிய பிரதமர், நாட்டின் பரந்த அபிவிருத்தி முன்னுரிமைகளின் ஒரு பகுதியாகக் கால்நடை மருத்துவ நிபுணர்களுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

“ஆரோக்கியமான மக்கள்தொகை, உற்பத்தித்திறன் மிக்க விவசாயத் துறை, நிலைபேறான சூழற்றொகுதி ஆகியவற்றுக்கு வலுவான கால்நடை மருத்துவத் துறை அவசியமாகும். இத்துறைக்கு ஆதரவளிப்பது வெறுமனே ஒரு துறைசார்ந்த கரிசனை மட்டுமன்று; அது நமது நாட்டின் நல்வாழ்விலும் எதிர்காலத்திலும் செய்யப்படும் முதலீடாகும்” என அவர் கூறினார்.

இந்நிகழ்வில் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, இலங்கை கால்நடை மருத்துவச் சங்கத்தின் தலைவர் கலாநிதி சுகத் பிரேமசந்திர, சங்கத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் உறுப்பினர்கள், தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவர், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிரதிநிதி திரு. விம்லேந்திர சரண், அரச சேவைகள், பல்கலைக்கழகங்கள், தனியார் கால்நடை மருத்துவ நிலையங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கால்நடை வளர்ப்பு மற்றும் விலங்கு சுகாதாரப் பராமரிப்புத் தொழில்துறைகள் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கால்நடை மருத்துவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular