63ஆவது ஆசிய – பசிபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் (ABU) பொதுச் சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய கூட்டங்களை இலங்கை முதன்முறையாக நடத்துகிறது.
ஆசிய – பசிபிக் பிராந்தியம் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட ஒலிபரப்பாளர்கள், ஊடகத் தலைவர்கள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 3ஆம் திகதி வரை கொழும்பிலுள்ள ‘சின்னமன் லைஃப் – சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ்’ வளாகத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் ஆதரவுடன் மகாராஜா ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
பொதுச் சபையின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொள்ளவுள்ளார்.
ஆசிய – பசிபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் பொதுச் சபையை இலங்கை நடத்துவது இதுவே முதல்முறையாகும். அதேபோன்று, தனியார் ஒலிபரப்பு நிறுவனமொன்று இந்நிகழ்வை ஏற்பாடு செய்வதும் இதுவே முதல் தடவையாகும்.
‘அமைதி மற்றும் மனிதநேயத்திற்கான ஊடகம்: உண்மை, நம்பிக்கை மற்றும் மாற்றம்’ என்ற தொனிப்பொருளில் இம்மாநாடு நடைபெறுகிறது.
இந்நிகழ்வை நடத்துவதன் மூலம் இலங்கையை சர்வதேச அரங்கில் முன்னிலைப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக மகாராஜா ஊடக வலையமைப்பின் குழுமப் பணிப்பாளர் செவான் டேனியல் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஊடக ஒன்றியத்தின் தொழில்துறைத் தலைவர்கள் இலங்கையில் ஒன்றுகூடுவது, நாட்டின் இயற்கை அழகு மற்றும் சுற்றுலாத் துறையை சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்துவதற்கான முக்கிய சந்தர்ப்பமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆசிய – பசிபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அகமது நதீம், இந்தப் பொதுச் சபையை அமைப்பின் முக்கிய வருடாந்த நிகழ்வாகக் குறிப்பிட்டு, இலங்கை இந்நிகழ்வை நடத்துவதற்கு முன்வந்துள்ளமையை வரவேற்றுள்ளார்.
இந்த மாநாட்டில் இடம்பெறும் கலந்துரையாடல்களில் வளர்ந்து வரும் ஒலிபரப்புத் துறைப் போக்குகள், ஊடகங்களின் மீள்திறன், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, பொதுச் சேவை ஊடகங்களின் எதிர்காலம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் முக்கிய கவனம் பெறவுள்ளன.
நிகழ்ச்சி நிரலின் மற்றுமொரு முக்கிய அம்சமாக, நவம்பர் 2ஆம் திகதி ரத்மலானையிலுள்ள ஸ்டெய்ன் ஸ்டுடியோவில் 15ஆவது ஆசிய – பசிபிக் ஒலிபரப்பு ஒன்றியப் பாடல் விழா நடைபெறவுள்ளது. இதில் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 10 நாடுகளின் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மேலும், இலங்கையின் சுற்றுலா, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை சர்வதேசப் பிரதிநிதிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், அவர்கள் காலி மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.
1964ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆசிய – பசிபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் தலைமையகம் மலேசியாவின் கோலாலம்பூரில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு 66 நாடுகளில் உள்ள 225 நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோரைச் சென்றடையும் ஊடக வலையமைப்பாகவும் விளங்குகிறது.
இந்நிகழ்வுக்கு வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறைக்குப் பொறுப்பான அமைச்சுகள், இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களும் ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
