HomeTop newsசெம்மணியில் நீதியைத் தடுக்கிறதா அரசு? கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி

செம்மணியில் நீதியைத் தடுக்கிறதா அரசு? கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள நான்காவது இடைக்கால அறிக்கை, உண்மைகளை மூடி மறைத்து மக்களைத் திசைதிருப்பும் முயற்சி எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், செம்மணி விவகாரம் தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட ஆய்வு முடிவுகளுக்கு முரணான வகையில், நான்காவது இடைக்கால அறிக்கையில் புதிய விளக்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதுவரை கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களில் பெரும்பாலானவை உடல்கள் இன்றிப் புதைக்கப்பட்டிருந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இயற்கை அழுத்தங்களால் உடைகள் மற்றும் உடல்கள் சிதைந்து மறைந்திருக்கலாம் என விளக்கமளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், செம்மணி விசாரணைகளை முன்னெடுப்பதற்குப் போதிய நிதி, தடயவியல் மற்றும் உடற்கூற்றியல் தொழில்நுட்ப வசதிகள் இல்லை என்பதை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சர்வதேச நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவ்விசாரணைகளை முறையாக முன்னெடுக்க சர்வதேச நிபுணர்களின் உதவியும் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை சர்வதேசப் பொறுப்புக்கூறலுடன் முழுமையாக முன்னெடுக்க அரசாங்கம் தயங்குவதாகக் குற்றஞ்சாட்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடந்த காலங்களில் குற்றங்களை மூடி மறைக்க முயன்ற அரசாங்கங்களிலிருந்து தற்போதைய அரசாங்கம் வேறுபட்டதாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

இறுதியாக, செம்மணி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களும் நீதிக்காகக் குரல் கொடுப்பவர்களும் தற்போதைய அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular