HomeTop newsதென் மாகாணத்தில் பிரம்மாண்ட மக்கள் பேரணி நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டம்

தென் மாகாணத்தில் பிரம்மாண்ட மக்கள் பேரணி நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டம்

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, கட்சியின் அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சிறையில் இருந்தாலும், கட்சியின் அரசியல் செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றித் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

நாமல் ராஜபக்ச சிறையில் இருப்பதால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பலவீனமடைந்துவிட்டதாகவும், அதன் அமைப்புக் கட்டமைப்பு சீர்குலைந்துவிட்டதாகவும் சில அரசியல் தரப்பினர் கருதக்கூடும். எனினும், அது தவறான எண்ணமாகும் என அவர் குறிப்பிட்டார்.

நாமல் ராஜபக்ச சிறையில் இருந்தபோதிலும், கட்சியின் பொதுச் செயலாளர், சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வருகிறார். இதன் காரணமாக, கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதுடன், உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் குறைபாடுகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலான விரிவான அரசியல் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் சாந்த பண்டார கூறினார்.

நாமல் ராஜபக்ச தலைமையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த தொகுதி மட்டக் கூட்டங்கள், அவர் இல்லாத நிலையிலும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களின் தலைமையில் அடுத்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் ஆரம்பிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அநுராதபுரத்தில் நடத்தப்பட்ட மக்கள் பேரணிக்கு இணையான வகையில், தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமான மக்கள் பேரணியொன்றை நடத்துவதற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

கட்சியின் தேசிய அமைப்பாளர் சிறையில் இருப்பதால் கட்சி வீழ்ச்சியடைந்துவிட்டதாகக் கருதுவது தவறானது எனத் தெரிவித்த சாந்த பண்டார, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு வலுவான அரசியல் கட்சி என்றும் சுட்டிக்காட்டினார்.

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆசியுடனும், நாமல் ராஜபக்சவின் நேரடி வழிகாட்டுதலுடனும் அனைத்து அரசியல் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular