ஊனமுற்றிருத்தல் அல்லது வேறு விசேட தேவைகளைக் கொண்டிருத்தல் ஒரு பிள்ளையின் எதிர்காலப் பயணத்திற்குத் தடையாக அமையக்கூடாது என்றும், பிள்ளைகளின் உண்மையான திறமைகளுக்கு முன்னுரிமையளித்துத் தடைகளற்ற, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளைக் கொண்ட சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கை மகளிர் சாரணர் சங்கத்தின் “மாற்றுத் திறமைகளைக் கொண்ட மகளிர் சாரணர் பிரிவின்” (Differently Abled Branch) உயரிய விருதான “Blue All Round Cord” விருதைப் பெற்ற சாரணர்களைக் கௌரவிப்பதற்காகச் செப்டம்பர் 20ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
“ஊனமுற்றிருத்தல் அல்லது வேறு விசேட தேவைகளைக் கொண்டிருத்தல் எந்தவொரு பிள்ளையின் எதிர்காலப் பயணத்திற்குத் தடையாக அமைய அனுமதிக்க இயலாது. பிள்ளைகளின் உண்மையான திறமைகளுக்கு முன்னுரிமையளித்து, தடைகளின்றி அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கும் சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு நமது அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.
ஊனமுற்ற சமூகத்தினரை வலுவூட்டுவதற்காக நாம் ஏற்கனவே பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம். உயர்கல்வியைக் கற்கும் விசேட தேவைகளைக் கொண்ட பல்கலைக்கழக மாணவர்களுக்காக முதற்கட்டத்தின் கீழ் தலா 100,000 ரூபா வீதமான விசேட கொடுப்பனவை ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று, ஊனமுற்ற மற்றும் விசேட தேவைகளைக் கொண்ட நபர்கள் மற்றும் குடும்பங்களுக்காக 37.4 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. ஊனமுற்ற நபர்களை வலுவூட்டும் தேசியக் கொள்கையைத் தயாரிப்பதற்கும் சமூக மட்டத்திலான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் உரிய அமைச்சுக்கு 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கின்றது.
அதுமட்டுமன்றி, 16,000 பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கும் வகையில் 3 ஆண்டுகளுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் விடுதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், அனைத்து வசதிகளையும் ஊனமுற்ற மாணவர்கள் இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் (Accessible) நவீனமயமாக்கப்படும்.
ஊனமுற்ற பிள்ளைகளுக்காக உதவித் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் டிஜிட்டல் கல்விச் சாதனங்களை வழங்கும் வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், பல்கலைக்கழகக் கல்வி மற்றும் தொழிற்கல்வியைப் பெறுவதிலும் ஏற்படும் தடைகளை நீக்கித் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
பல பெற்றோர்களின் மனக்குமுறலாகவும், மிகப்பெரிய வேதனையாகவும், அச்சமாகவும் இருந்து வரும், ‘நாம் இல்லாத காலத்தில் நமது பிள்ளைகளுக்கு என்ன நடக்கும்?’ என்ற கேள்விக்குப் பதிலாக, ஊனமுற்ற பிள்ளைகள் சுதந்திரமான வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான பொருளாதார அடித்தளத்தையும், திறன்களை வளர்த்துக்கொள்வதற்குத் தேவையான பின்னணியையும் அமைத்துக் கொடுப்பதை எமது முதன்மையான பொறுப்பாக ஏற்றுப் பணியாற்றி வருகின்றோம்.
வளமான நாடு – அழகான வாழ்க்கை என்பது பொருளாதாரத்தினால் மாத்திரம் உறுதிப்படுத்தப்படுவது அல்ல. அனைவர் மீதும் அன்புகாட்டும், அனைவரையும் ஏற்றுக்கொள்ளும், அனைவரையும் மதிக்கும் சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதன் மூலமே வாழ்க்கை அழகாகின்றது. வெற்றி என்பது நாம் எதிர்கொள்ள வேண்டிய தடைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் ஒன்றல்ல, அத்தடைகளை நாம் தைரியத்துடன் எதிர்கொள்ளும் விதத்திலேயே வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.
உங்களிடமிருந்து நமது ஒட்டுமொத்த சமூகமும் பரஸ்பர பரிவு, தன்னம்பிக்கை மற்றும் தைரியம் ஆகியவற்றைப் பற்றிக் கற்றுக்கொள்ள வேண்டும்” எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை மகளிர் சாரணர் சங்கத்தின் தலைவி திருமதி சுவர்ணிகா பிட்டிகல, தலைமை ஆணையாளர் கலாநிதி குசந்தா ஹேரத், பிரதித் தலைமை ஆணையாளர் திருமதி நிர்மலி வில்லியம், உதவி ஆணையாளர் திருமதி நந்துனி விக்கிரமதுங்க, பிள்ளைகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
