இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்துள்ளார்.
இருதரப்பு சந்திப்பு செப்டெம்பர் 16ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.
2027ஆம் ஆண்டு இலங்கை – சீனா இராஜதந்திர உறவுகளின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்வி, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் சீருடை உதவி தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தற்காலிக ஏற்பாட்டுக்குப் பதிலாக, ஒவ்வொரு பாடசாலை ஆண்டின் ஆரம்பத்திலும் உரிய நேரத்தில் சீருடைகளை வழங்கும் வகையில் 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான நீண்டகாலத் திட்டத்தின் கீழ் இந்த உதவியை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இதனிடையே, சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் டிஜிட்டல் கல்வித் திட்டத்தின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டது. இதன் கீழ் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 500 டிஜிட்டல் வகுப்பறைகளுக்கு 900 ஸ்மார்ட் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.
கல்வித் துறையை டிஜிட்டல்மயமாக்குவதற்கான கொள்கைகளை உருவாக்க நியமிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் செயலணிக்குழு தொடர்பிலும் பிரதமர் சீனத் தூதுவருக்கு விளக்கமளித்தார்.
இந்த நடவடிக்கையைப் பாராட்டிய சீனத் தூதுவர், இதற்காக சீன அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைத் தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் சீனத் தூதரகத்திற்கும் குறித்த செயலணிக்குழுவிற்கும் இடையில் மேலதிக கலந்துரையாடல்களை முன்னெடுக்கவும் இணக்கம் காணப்பட்டது.
மேலும், சீன அரசாங்கத்தின் புலமைப்பரிசில் திட்டம் மற்றும் சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டம் ஊடாக இலங்கை மாணவர்களுக்கு கிடைக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், பிள்ளைகளின் இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் இணைந்து செயற்படுவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
‘திட்வா’ சூறாவளியினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளின்போது சீனா வழங்கிய ஒத்துழைப்புக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். அதேவேளை, திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் தொடர்பிலும் பிரதமர் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
காலநிலை மாற்றங்களின் தாக்கங்களுக்கு முகங்கொடுக்கும் திறனை மேம்படுத்துவதற்காக இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
