HomeTop newsபாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்து - 18 தொழிலாளர்கள் பலி

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்து – 18 தொழிலாளர்கள் பலி

தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; மேலும் 24 பேர் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர். உயிருக்கு ஆபத்தான சூழலில் அவர்கள் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் கருதும் நிலையில், மீட்பு குழுவினர் அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) நிகழ்ந்த இந்த வெடிவிபத்து, மீத்தேன் வாயு தேங்கியதால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது பலூசிஸ்தான் மாகாண தலைநகரான குவெட்டாவின் புறநகர் பகுதியில் நிகழ்ந்ததாக அரசு சுரங்க ஆய்வாளர் கனி பலோச் தெரிவித்தார்.

விபத்து நடந்த சில மணிநேரங்களுக்கு பிறகு முதலில் ஏழு தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன; பின்னர் அவசரக்கால மீட்பு குழுவினர் மேலும் 11 உடல்களை கண்டெடுத்ததாக அதிகாரிகளும் மாகாண பேரிடர் மேலாண்மை அமைப்பும் தெரிவித்தன.

சிக்கியுள்ள அனைத்து தொழிலாளர்களும் கண்டறியப்படும் வரை மீட்பு பணிகள் தொடரும் என்று கூறிய பலோச், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

“மீத்தேன் வாயு வெடிப்புகளுக்கு பிறகு உயிருடன் யாரையாவது கண்டறிவதற்கான வாய்ப்புகள் குறைவு; ஏனெனில் ஆக்சிஜன் அளவு பூஜ்ஜியமாக குறைந்துவிடுகிறது. மேலும் மீட்பு குழுவினரும் சுரங்கத்திற்குள் மிகுந்த எச்சரிக்கையுடனேயே முன்னேறிச் செல்கின்றனர்,” என்று பலோச் கூறினார்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்வதற்காக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருவதாகவும், அதேவேளையில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களின் உறவினர்கள் பதற்றத்துடன் தகவலுக்காகக் காத்திருப்பதாகவும் பலோச் தெரிவித்தார்.

மீட்புக் குழுவினர் மிகவும் கடினமான சூழலில் பணியாற்றி வருவதாக பலூசிஸ்தான் மாகாண சுரங்க மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் ஷோயப் நோஷர்வானி கூறினார். தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் மாகாண அரசு முழு வீச்சில் ஈடுபடும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இரங்கல் தெரிவித்த நோஷர்வானி, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்திற்கும் 5,00,000 பாகிஸ்தான் ரூபாயை இழப்பீடாக மாகாண அரசு வழங்கும் என்று அறிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular