சிறுபோக நெல் கொள்வனவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த நான்கு நாட்களில் 305 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவிக்கையில், கடந்த 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்த நெல் தொகை கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இதுவரை அதிகளவிலான நெல் அம்பாறை மாவட்டத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் கணிசமான அளவில் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபோக நெல் கொள்வனவு நடவடிக்கைகள் கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதிகளவில் நெல் அறுவடை செய்யப்படும் பகுதிகளை மையப்படுத்தி நெற்களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டு கொள்வனவு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, ஒரு கிலோ நாடு நெல்லுக்கு 120 ரூபாய், சம்பா நெல்லுக்கு 130 ரூபாய் மற்றும் கீரி சம்பா நெல்லுக்கு 140 ரூபாய் என்ற அடிப்படை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த விலைகளின் அடிப்படையில், நாட்டின் 143 நெற்களஞ்சியசாலைகள் ஊடாக நெல் கொள்வனவு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
