HomeTop newsசர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து இலங்கை எப்போதும் நடுநிலை வகிக்கும்

சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து இலங்கை எப்போதும் நடுநிலை வகிக்கும்

இலங்கை எப்போதும் நடுநிலையாகவும், சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவும் செயற்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் எஸ். போல் கபூருடன் (S.Paul Kapoor) அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் போது, அமெரிக்கா இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்காக அமைச்சர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் நிலவிய யுத்த சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கைக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வழங்கிய ஆதரவிற்கு அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கடல்சார் ரோந்துப் படகுகள் மற்றும் விமானங்களுக்காகவும் அரசாங்கத்தின் நன்றியறிதலை அமைச்சர் இங்கு சமர்ப்பித்தார்.

இலங்கையில் பாதுகாப்பான மற்றும் முதலீட்டுக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளதால், அமெரிக்க முதலீட்டாளர்களை இலங்கையில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்த அமைச்சர், அதற்கான வசதிகளை வழங்க அரசாங்கம் ஆர்வத்துடன் செயற்பட்டு வருவதாகவும் போல் கபூரிடம் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர், இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை தாம் பெரிதும் மதிப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் போது, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அமெரிக்க – ஈரான் ஒப்பந்தம் குறித்தும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், அந்த ஒப்பந்தத்தின் வெற்றிக்காக அமைச்சர் விஜித ஹேரத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் ஜூலை 04ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவிற்கும் அந்நாட்டு மக்களுக்கும் அமைச்சர் விஜித ஹேரத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular