தெற்காசியாவின் எதிர்காலம் உலகளாவிய அதிகாரச் சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது பொருளாதாரப் போட்டித்தன்மையினால் மாத்திரம் தீர்மானிக்கப்படப்போவதில்லை.
அரசாங்கம் ஒரு தனித்த கட்டமைப்பாக இருந்துகொண்டு, மக்களை ஆட்சி செய்யும் ஓர் இராஜ்யமாக இராது, மக்களுடன் இணைந்து ஆட்சி செய்யும், மக்களையும் உள்வாங்கிய ஓர் இராஜ்யமாகக் கட்டியெழுப்புவதற்கு நாம் உறுதி கொண்டிருக்கின்றோம்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
தெற்காசியாவின் எதிர்காலம் உலகளாவிய அதிகாரச் சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது பொருளாதாரப் போட்டித்தன்மையினால் மாத்திரம் தீர்மானிக்கப்படப்போவதில்லை. அரசாங்கம் ஒரு தனித்த கட்டமைப்பாக இருந்துகொண்டு, மக்களை ஆட்சி செய்யும் ஓர் இராஜ்யமாக இராது, மக்களுடன் இணைந்து ஆட்சி செய்யும், மக்களையும் உள்வாங்கிய ஓர் இராஜ்யமாகக் கட்டியெழுப்புவதற்கு நாம் உறுதி கொண்டிருக்கின்றோம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
சர்வதேசக் கற்கைகள் சங்கத்தினால் (ISA) “மாற்றம் கண்டு வரும் உலக அரசியலில் தெற்காசியா” எனும் தலைப்பில், தெற்காசியாவில் முதன்முறையாகக் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள South Asia in World Politics (SAWP) Conference 2026 மாநாட்டில், ஆகஸ்ட் 6ஆம் திகதி கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆகஸ்ட் 6 முதல் 8 வரை இலங்கையில் நடைபெறும் இம்மாநாட்டில், தெற்காசியா உள்ளிட்ட ஏனைய பிராந்தியங்களின் சர்வதேச உறவுத் துறைசார் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் கலந்துகொள்கின்றனர். தற்போது பிராந்திய மற்றும் உலகளாவிய ரீதியில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிதல், அறிவு மற்றும் கருத்துப் பரிமாற்றம் என்பன இம்மாநாட்டின் நோக்கங்களாகும்.
இதன்போது, தெற்காசியப் பிராந்தியத்தின் வரலாறு, பின்னணி, சவால்கள் மற்றும் எதிர்காலத் தொலைநோக்கு குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர், ஆசியாவின் இளம் சனத்தொகை, வளர்ந்து வரும் மனித வளம் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் ஆகியன தெற்காசியப் பிராந்தியத்தின் எதிர்காலத்தை உருவாக்கும் எனத் தெரிவித்தார்.
பிராந்திய ரீதியில் கட்டியெழுப்பப்படும் உரையாடல்கள், ஒத்துழைப்புகள் மற்றும் இத்துறைகளில் அறிவைப் பகிர்ந்துகொள்வதற்காக ஏற்பாடு செய்யப்படும் மாநாடுகளை மேலும் வலுப்படுத்துவதன் மூலம், தனி ஒரு நாட்டின் அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதற்கு அப்பால் சென்று, வளமான, பரஸ்பரத் தொடர்புகளின் மீதான தெற்காசியாவைக் கட்டியெழுப்ப முடியும் என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார்.
வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் அனைவரையும் உள்வாங்கிய நல்லாட்சியைப் பலப்படுத்துவதன் மூலம் இலங்கை தனது நிறுவனச் சீர்திருத்தச் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கையின் மாற்றம் தொடர்ச்சியான செயற்பாடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிறுவனச் சீர்திருத்தங்களுக்குப் பொறுமை, ஒழுக்கம், சுயவிசாரணை மற்றும் உண்மையை எதிர்கொள்ளும் தைரியம் ஆகியன அவசியமாகின்றன. அந்த வகையில் எமது இந்தப் பயணப்பாதை தெளிவானதாகும். அரசாங்கம் தனித்தொரு கட்டமைப்பாக இருந்துகொண்டு மக்களை ஆட்சி செய்யும் ஓர் அரசாங்கம் எமக்குத் தேவையில்லை. மக்களுடன் இணைந்து ஆட்சி செய்யும், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் அனைவரையும் உள்வாங்கிய, மனிதநேயம் மிக்க ஓர் அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பாகும். தெற்காசியாவின் எதிர்காலம் உலகளாவிய அதிகாரச் சமநிலை அல்லது பொருளாதாரப் போட்டிகளினால் மாத்திரம் தீர்மானிக்கப்படப்போவதில்லை. மாறாக, ஜனநாயக நிறுவனங்களின் பலம், அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி மற்றும் நீதி, சமத்துவம், பிராந்திய ஒத்துழைப்பு என்பவற்றின் மீதான நமது அர்ப்பணிப்பிலேயே அது தங்கியிருக்கின்றது எனத் தெரிவித்தார்.
இதன்போது, அரசியல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான பேராசிரியரான (Prof. Neil DeVotta) இலங்கையின் சீர்திருத்தச் செயற்பாடுகளுக்கு, குறிப்பாகத் தெற்காசியப் பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்தினால் வழங்கக்கூடிய ஆதரவு குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர்,
தெற்காசியப் பிராந்தியத்தின் பெரும்பாலான நாடுகள் முன்னெடுத்துச் செல்லும், பரீட்சைகளை மையமாகக் கொண்ட கல்வி முறையின் காரணமாகப் பெருமளவு பொதுவான சவால்களை எதிர்கொள்கின்றன. இத்தகைய கட்டமைப்புகள் பெரும்பாலும் இளைய தலைமுறையினரின் கற்றல் அனுபவங்களையும் எதிர்கால வாய்ப்புகளையும் மட்டுப்படுத்துகின்றன.
அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் கல்விச் சீர்திருத்தங்களின் மூலமாக இலங்கை, பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறையிலிருந்து மாறுபட்டு, தொழில்சார் வாய்ப்புகளையும் சமூகத்திற்குப் பயனுள்ள பிரஜைகளையும் உருவாக்கும் கல்வி முறைக்கு மாற்றமடைந்து வருகின்றது. இலங்கையைக் கல்விக்கான பிராந்திய மையமாக இயங்கச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனக் கூறிய பிரதமர், இந்த மாற்றத்திற்கும், ஒரு பிராந்தியமாக எதிர்கொள்ளும் பொதுவான சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கும், பிராந்திய ஒத்துழைப்பு, உரையாடல் மற்றும் இவ்வாறான மாநாடுகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இதன்போது, பொருளாதார முன்னேற்றம் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பிரதமர்,
வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஊழலற்ற ஆட்சி தொடர்பில் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் கிடைத்து வரும் நேர்மறையான அங்கீகாரம், நாட்டின் அரசியல் சீர்திருத்தத்தின் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, இலங்கை சீர்திருத்தப்பட்டு வருவதால் அந்த நேர்மறையான மதிப்பீடுகள் காரணமாக, முதலீடுகள் மற்றும் புதிய வாய்ப்புகளுக்கான பொருத்தமான இலக்காகப் பிரபலமடைந்து வருகின்றது என்பதையும் எடுத்துரைத்தார். வறுமை இன்னமும் பிரதான சவாலாக இருந்து வருகின்றபோதிலும், பொருளாதார வளர்ச்சி, துறைசார் அபிவிருத்தி மற்றும் அரசுத் துறையின் நிறுவனச் சீர்திருத்தங்கள் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்குவது அத்தியாவசியமாகின்றது என்பதை வலியுறுத்திய பிரதமர், இலங்கையின் அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் சர்வதேச பங்காளிகளை முதலீடுகள் உள்ளிட்ட பங்களிப்புகளுக்கு முன்வருமாறு அழைப்பு விடுத்தார்.
ISA–SAWP Conference 2026 மாநாடானது சர்வதேச உறவுகள் துறையில் கல்விசார் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்கும், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நடைமுறைத் துறையில் உள்ளவர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான கல்விசார் தளத்தை உருவாக்கி, புவிசார் அரசியல், பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம், நல்லாட்சி (good governance) மற்றும் மாற்றம் பெற்று வரும் சர்வதேச செயற்பாடுகள் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் புதிய ஆராய்ச்சி மற்றும் கொள்கை உரையாடல்களுக்குக் களம் அமைத்திருக்கின்றது.
