எரிபொருள் மானியத் திட்டத்திற்காக அரசு ஒதுக்கியுள்ள நிதி ஜூன் மாதத்துடன் நிறைவடையும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரச நிதிக் குழுவின் முன்னிலையில் ஆஜராகியபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் மாதம் முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள மானியத் திட்டத்தின் கீழ் ஒரு லீட்டர் டீசலுக்கு ரூ.100 மற்றும் ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு ரூ.20 வீதம் அரசு மானியம் வழங்கி வருகிறது.
இந்த மானியத் திட்டத்திற்காக ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.15.3 பில்லியன் செலவிடப்பட்டுள்ளதாகவும், மொத்த மானிய ஒதுக்கீடு சுமார் ரூ.20 பில்லியன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய செலவின நிலவரத்தின்படி, ஒதுக்கப்பட்ட மானிய நிதி ஜூன் மாதத்துடன் முழுமையாக பயன்படுத்தப்பட்டு தீரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஜூன் மாதத்திற்குப் பிறகும் மானியத்தைத் தொடர்வது தொடர்பில் அரசு இதுவரை எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
அரசு ஒரு லீட்டர் டீசலுக்கு ரூ.100 மானியம் வழங்கினாலும், ஏப்ரல் மாத தரவுகளின் அடிப்படையில் ஒரு லீட்டர் டீசலுக்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ரூ.129 இழப்பு ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால், அரசின் மானிய உதவிக்குப் பின்னரும் ஒரு லீட்டர் டீசலுக்கு ரூ.29 இழப்பை நிறுவனம் தொடர்ந்து சுமந்து வருவதாக ஜனக ராஜகருணா தெரிவித்தார்.
