டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க அனைத்து பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (02) முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடுகின்றனர்.
இந்த சந்திப்பின் பின்னர், தனியார் பேருந்து சேவைகளை வழக்கம்போல் தொடர்வதா அல்லது வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதா என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அனைத்து பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகளும் இன்று காலை ஒன்றுகூடி, டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து பேருந்துத் துறையை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளதாக கூறினார்.
“அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தவிதமான சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில் இந்தத் தொழிலை தொடர்வது மிகவும் சிரமமாகியுள்ளது. பல பேருந்து உரிமையாளர்கள் சேவைகளில் இருந்து விலக வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர். எனினும், சங்கத் தலைமையுடன் கலந்தாலோசித்து இன்று இறுதித் தீர்மானத்தை அறிவிப்போம்” என கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.
