Homeஉள்நாடுகண்டெடுத்த போனை சொந்தமாக்கினால் 'குற்றவியல் முறைகேடு'

கண்டெடுத்த போனை சொந்தமாக்கினால் ‘குற்றவியல் முறைகேடு’

இலங்கை காவல்துறை, நாடு முழுவதும் உள்ள காவல்துறை நிலையங்களுக்கு கையடக்கத் தொலைபேசிகள் தொலைந்து போதல் மற்றும் திருடப்படுதல் தொடர்பான முறைப்பாடுகள் நாளாந்தம் பெருமளவில் கிடைத்து வருவதாக தெரிவித்துள்ளது.

இவ்வாறான தொலைபேசிகள் அங்கீகரிக்கப்படாத நபர்களின் கைகளுக்குச் செல்லும் போது, உரிமையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி தரவுகள் ஆபத்துக்குள்ளாகும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

தொலைந்து போன அல்லது திருடப்பட்ட தொலைபேசிகள் சமூக விரோத மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படும் அபாயமும் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தொலைபேசி காணாமல் போனவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்குநரை தொடர்புகொண்டு SIM அட்டையை செயலிழக்கச் செய்யுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறையில் முறைப்பாடு செய்யும் போது தொலைபேசியின் IMEI (International Mobile Equipment Identity) எண்ணை வழங்குவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. IMEI எண்ணை அறிய *#06# என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொலைந்த தொலைபேசிகளை கண்டறிவதற்காக I Need Police Portal என்ற இணையதளத்தில் தகவல்களை பதிவு செய்யுமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

பிறருக்குச் சொந்தமான பொருட்களை தன்னிடம் வைத்திருப்பது இலங்கை தண்டனைச் சட்டத்தின் கீழ் “குற்றவியல் முறைகேடு” எனக் கருதப்படுவதுடன், அதற்காக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, திருடப்பட்ட தொலைபேசிகளை மலிவான விலையில் வாங்கி பயன்படுத்துவது கூட ஒரு குற்றமாகும். இதற்காக மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.

இரண்டாம் நிலை (Second-hand) கையடக்கத் தொலைபேசிகளை வாங்கும் போது, அவை திருடப்பட்டவை அல்ல என்பதை “Find Genuine Phone” வசதியின் மூலம் சரிபார்த்து கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தொலைபேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்திற்கிடமான வகையில் தொலைபேசிகளை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடரப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular