2012ஆம் ஆண்டு கிரீஸ் நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருந்த நிலையிலும், அந்நாட்டின் பிணைமுறிப் பத்திரங்களை (Bonds) கொள்வனவு செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 184 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராளுக்கு எதிராக லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு மீண்டும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 67 (5) பிரிவின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, மூன்று மாதங்களுக்குள் 100 மில்லியன் ரூபாவை வைப்புச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், குறித்த வழக்கை மீளப் பெறுவதற்கு லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.
எனினும், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட கால எல்லைக்குள் அந்த தொகையை வைப்புச் செய்து நிபந்தனையை நிறைவேற்றத் தவறியதாக கூறப்படுவதால், தற்போது மீண்டும் மேல் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
