சிறி (Siri) குரல் உதவி மென்பொருளுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) இற்றைப்படுத்தல்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், 250 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு வழங்க ஆப்பிள் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு 2024 ஆம் ஆண்டு பீட்டர் லேண்ட்ஷெஃப்ட் என்பவரால் கலிபோர்னியா கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மென்பொருள் உருவாக்குநர்கள் மாநாட்டில் (WWDC) அறிவிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு அம்சங்கள், அதேநாளில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய iPhone கைபேசிகளில் இடம்பெறாததே இந்த வழக்கிற்கான பிரதான காரணமாகும்.
புதிய AI அம்சங்கள் குறித்து பரவலான விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கைபேசிகள் சந்தைக்கு வந்தபோது அவை செயல்பாட்டில் இல்லாதது பயனாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாமதம் காரணமாக நிதி மற்றும் நம்பிக்கை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பின்னர், 2025 ஆம் ஆண்டில் சிறியின் AI மேம்படுத்தல்கள் இந்த ஆண்டு வரை தாமதமாகும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள வருடாந்த மென்பொருள் உருவாக்குநர்கள் மாநாட்டில் புதிய AI அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவன நிர்வாகிகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும், இந்த இணக்கப்பாட்டின் மூலம் தாம் எந்த தவறும் செய்ததாக நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், இந்த உடன்படிக்கைக்கு நீதிமன்ற அங்கீகாரம் இன்னும் கிடைக்க வேண்டியுள்ளது.
இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில கூடுதல் அம்சங்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பான கோரிக்கைகளைத் தீர்க்கும் நோக்கில் இந்த உடன்படிக்கைக்கு வந்துள்ளோம். பயனர்களுக்கு புதுமையான சேவைகளை தொடர்ந்து வழங்குவதே எமது முன்னுரிமையாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டு ‘Apple Intelligence’ அறிமுகமானதிலிருந்து பல புதிய AI அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
