Homeஉள்நாடுஅர்ச்சுனா எம்.பிக்குப் பிணை!

அர்ச்சுனா எம்.பிக்குப் பிணை!

கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைப் பிணையில் செல்ல மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று அனுமதித்துள்ளது. அதேவேளை, அவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கைதான பெண்ணும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்றின் உரிமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் பிணக்கு, கடந்த 25 ஆம் திகதி கைகலப்பாக மாறியது. இதன்போது, அர்ச்சுனா இராமநாதன் தனது கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் குறித்து இளவாலை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை வாக்குமூலம் அளிக்கச் சென்ற அர்ச்சுனா இராமநாதன் கைது செய்யப்பட்டார். அன்று அவரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, இன்று புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, 20 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அத்துடன், எதிர்த்தரப்பினருடன் எந்தவிதப் பேச்சுகளிலும் ஈடுபடக் கூடாது எனும் கடுமையான நிபந்தனையும் அவருக்கு விதிக்கப்பட்டது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணும் இன்று நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular