பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், ‘சதித்திட்டம்’ என்ற குற்றச்சாட்டை முன்னெடுத்து செல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
இந்த மனு மீதான உத்தரவை எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரரான யோஷித ராஜபக்ஷ சார்பில் சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைத்தார். அதேவேளை, சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
இரு தரப்பினரின் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த பின்னர், நீதியரசர்கள் அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு விசாரணைகளை நிறைவு செய்ததுடன், தீர்ப்பை ஜூலை 3ஆம் திகதி வழங்க தீர்மானித்துள்ளது.
