Homeசெய்தி'நில உரிமையே நிஜ உரிமை': பசறையில் மேதினக் கூட்டம் ஏற்பாடு!

‘நில உரிமையே நிஜ உரிமை’: பசறையில் மேதினக் கூட்டம் ஏற்பாடு!

மலையக ஊழியர் சங்கத்தின் இம்முறைக்கான மேதினக் கூட்டத்தை, பசறை பிரதேச சபை மண்டபத்தில் உள்ளகக் கூட்டமாக (Indoor Meeting) நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்மணி சிவனேசன் தெரிவித்தார்.

சங்கத்தின் தொழில் சங்க காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இந்த மேதினக் கூட்டம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இது வழக்கமான மேதினக் கூட்டங்களைப் போல அரசியல் எதிரிகளை விமர்சிக்கும் மேடையாக அமையாது. மாறாக, மலையக மக்களின் அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியான தெளிவூட்டல் கூட்டமாக இது அமையும். சங்கத்தின் ஸ்தாபக தலைவர் கௌரவ ஜெயம் மற்றும் பெருந்தலைவர் விஸ்வநாதன் ஆகியோரின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது,” எனக் குறிப்பிட்டார்.

கூட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:

தொனிப்பொருள்: “மலையகம் எமது தாயகம், நாம் ஒரு தேசியம்” என்ற மறைந்த தலைவர் பெரியசாமி சந்திரசேகரனின் கொள்கையை நிலைநிறுத்துதல் மற்றும் “நில உரிமைதான் எங்களுக்கான நிஜ உரிமை” என்ற கோரிக்கையை வலியுறுத்துதல்.

அறிவுசார் வழிகாட்டல்: தொழிலாளர்களின் உரிமைகள், தொழிற்சங்கக் கட்டமைப்பு, மற்றும் தனியார் நிறுவனங்களின் அடக்குமுறைகளை எதிர்கொள்ளுதல் குறித்த விரிவான கலந்துரையாடல்கள்.

இளைஞர் பங்களிப்பு: மலையகத்தின் கல்வி கற்ற இளைய தலைமுறையினரை அரசியல் மற்றும் தொழிற்சங்க மேடைக்குக் கொண்டு வருதல்.

அரசியல் ஆளுமை: பதுளை, மொனராகலை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மலையக மக்கள் எதிர்நோக்கும் அரசியல் அநாதரவு நிலை மற்றும் ஆளுமைப் பற்றாக்குறை குறித்து கலந்துரையாடி, சமூக இருப்பைத் தக்கவைப்பதற்கான வழிமுறைகளை ஆராய்தல்.

தொடர்ந்து பேசிய கண்மணி சிவனேசன், “வெறுமனே கரகோஷத்திற்காக நேரத்தை வீணடிக்காமல், ஏற்கனவே வென்றெடுத்த உரிமைகளை இழந்துவிடாமல் பாதுகாப்பதற்கான பலமிக்க கட்டமைப்பை உருவாக்குவதே எமது நோக்கம். இதற்காக விசேட நிபுணர்களை அழைத்து விரிவுரைகளை ஏற்பாடு செய்துள்ளோம்,” என்றார்.

மலையக ஊழியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடமே ஆகின்ற போதிலும், மலையக மக்கள் அனைவரும் கௌரவமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற இலட்சியத்தோடு பயணிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து தொழிலாளர்கள், நலன் விரும்பிகள் மற்றும் இளையோரை இந்த மேதினக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தார்.

R.T பசறை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular