Homeஉள்நாடுசுயாதீன விசாரணைக்கு இடமளித்தே அமைச்சர் ராஜினாமா!

சுயாதீன விசாரணைக்கு இடமளித்தே அமைச்சர் ராஜினாமா!

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இராஜினாமா கடிதங்களை கையளித்து தமது பதவிகளில் இருந்து விலகினர்.

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைக்கு இடமளிக்கும்  வகையிலேயே இம்முடிவை எடுத்துள்ளனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நிலக்கரி இறக்குமதி மற்றும் அது சார்ந்த மின்சார உற்பத்தியின் போது முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக இன்று (17) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று இன்று நியமிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே குறித்த ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணை நடவடிக்கைகளுக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.

தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ள வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி,

” நிலக்கரி விநியோகம் தொடர்பாக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க எடுத்த தீர்மானத்தையும், 2009ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற நிலக்கரி இறக்குமதிகள் குறித்து முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் மூலம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளமை மூலம் ஊழலுக்கு எதிராகவும் மக்கள் ஆணையை நிறைவேற்றுவதிலும் ஜனாதிபதி கொண்டுள்ள துணிச்சலான உறுதியை தாம் பாராட்டுவதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணை நடவடிக்கைகள் மிகவும் சுயாதீனமாகவும் எவ்வித பக்கச்சார்புமின்றியும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனத் தான் நம்புவதாகவும், விசாரணைகள் நடைபெறும் காலப்பகுதியில் தான் அந்தப் பதவியில் நீடிப்பது அதற்குத் தடையாக அமையலாம் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில், இன்று (17) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பிக்கப்படவுள்ள விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதையும், அந்த விசாரணைகளின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, அதற்கு இடமளிக்கும் வகையில் தான் வகிக்கும் செயலாளர் பதவியிலிருந்து விலகுவது பொருத்தமானது எனத் தான் நம்புவதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தனது இராஜினாமா கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular