Homeஉள்நாடுகுருக்கள்மடத்தில் இரண்டாவது நாளாக தொடரும் அகழ்வு பணி!

குருக்கள்மடத்தில் இரண்டாவது நாளாக தொடரும் அகழ்வு பணி!

தற்செயலாக எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படாமல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்த: ஒரு மனிதப் புதைகுழி என சந்தேககிக்கப்படும் தளத்தில் அகழ்வாய்வுப் பணிகள் இன்று இரண்டாவது நாளாக இடம்பெறுகின்றன.

தற்செயலாக மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படாமல், நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் இலங்கையில் அகழ்வாய்வு செய்யப்படும் முதல் மனிதப்புதைகுழி இதுவாகும்.

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டம், குருக்கள்மடத்தில், அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில், களுவாஞ்சிக்குடி நீதவான் தர்மலிங்கம் பிரதீபனின் மேற்பார்வையிலும், 11 வைத்திய மற்றும் சட்ட நிபுணர்கள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் பங்களிப்புடனும், நேற்றைய தினம் திங்கட்கிழமை (மார்ச் 30) அகழ்வாராய்வுப் பணிகள் ஆரம்பமாகின.

நாளாந்தம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்ள குழுவினர் திட்டமிட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அடையாளம் காணப்பட்ட பகுதியில் 5 மீற்றர் நீளம், 5 மீற்றர் அகலம் மற்றும் குறைந்தது 9 அடி ஆழத்தில் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி ஜாபிர் ராசிக் மொஹம்மட் தெரிவிக்கின்றார்.

“ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில், ரேடார் மூலம் ஆய்வு செய்தமைக்கு அமைய நிலத்திற்கு கீழ் சில இடையூறுகள் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டு அறிக்கையிடப்பட்டிருந்தது. அதற்கமைய நீதிமன்றத்தின் அனுமதிக்கு அமைய முதல் கட்டமாக இந்த பிரதேசம் தெரிவு செய்யப்பட்டு, அந்த பிரதேசத்தில் 5 மீற்றர் நீளமும், 5 மீற்றர் அகலமும் கொண்ட பிரதேசத்தில் அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் 9 அடி ஆழத்திற்கு அகழ்வதாக தீர்மானிக்கப்பட்டு பணிகள் இடம்பெறுகின்றன.”

குருக்கள்மடத்தில் உள்ள மனிதப் புதைகுழியில் அகழ்வாய்வை ஆரம்பிக்க ரூ. 2.8 மில்லியன் தேவைப்படும் என்ற மதிப்பீட்டை கொழும்பு தலைமை சட்ட வைத்திய அதிகாரி செபடெம்பர் 23, 2025 அன்று களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

மார்ச் 09, களுவாஞ்சிக்குடி நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மார்ச் 30, மனித புதைகுழியில் முதல் கட்ட அகழ்வாய்வை ஆரம்பிக்க நீதவான் உத்தரவிட்டார்.

குருக்கள்மடத்தில் மனிதப் மனிதப்புதைகுழி இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதவான் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் ஓகஸ்ட் 25, 2025 அன்று அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குறித்த படுகொலைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2014 சுற்றுலா நீதிமன்றம்

1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்து காத்தான்குடிக்குத் திரும்பிய முஸ்லிம்கள் குழு ஒன்று படுகொலை செய்து புதைத்ததாக உள்ளூர்வாசி அப்துல் மஜீத் அப்துல் ரவூப் களுவாஞ்சிக்குடி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த வழக்கு ஜூலை 1, 2014 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, படுகொலை செய்து புதைக்கப்பட்டமைக்கான நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பிரதேசத்தில் அகழ்வினை மேற்கொள்வதற்குத் தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிபதி ஏ.எம். ரியால் உத்தரவிட்டார், எனினும் அந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

11 வருடங்களின் பின்னர் களுவாஞ்சிக்குடி, நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் அப்துல் ரவூஃப் தனது சட்டத்தரணிகள் மூலம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், ஜூலை 11, 2025 அன்று இந்த வழக்கு திறந்த நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular