உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் தனியார் முதலீட்டாளர்களை இணைக்கும் வகையில் முன்வைக்கப்பட்டிருந்த முதலீட்டுத் திட்டத்தை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) கைவிட முடிவு செய்துள்ளது.
ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தீர்மானம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மற்றும் பல்வேறு கால்பந்து சங்கங்களிடமிருந்து எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கிய கால்பந்து போட்டிகளை நடத்துவதற்காக சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான புதிய துணை நிறுவனமொன்றை உருவாக்கவும், அதில் 20 சதவீத பங்குகளை வெளி முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யவும் ஃபிஃபா முன்னதாக திட்டமிட்டிருந்தது.
எனினும், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் எதிர்வரும் உலகக் கோப்பை போட்டிகளை புறக்கணிக்க நேரிடும் என ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (யுஇஎஃப்ஏ) எச்சரிக்கை விடுத்திருந்தது.
உலக கால்பந்தில் செல்வாக்கு மிக்க அமைப்பாகக் கருதப்படும் யுஇஎஃப்ஏ, ஃபிஃபாவின் தனியார் முதலீட்டுத் திட்டத்திற்கு எதிராக தனது உறுப்பு நாடுகளின் ஆதரவை திரட்டியது.
இதன் தொடர்ச்சியாக, 55 யுஇஎஃப்ஏ உறுப்பு சங்கங்களும் உலகக் கோப்பை மற்றும் ஏனைய அனைத்து ஃபிஃபா போட்டிகளையும் புறக்கணிப்பது தொடர்பாக ஒருமித்த எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
