Homeஉள்நாடு"தமிழரசுக் கட்சியில் சேரும் தகுதி முன்னாள் போராளிகளுக்கே அதிகம்"

“தமிழரசுக் கட்சியில் சேரும் தகுதி முன்னாள் போராளிகளுக்கே அதிகம்”

“எங்களுடைய இலங்கைத் தமிழரசுக் கட்சியில் வந்து சேர எவருக்கு அதிகூடிய தகுதி இருக்கின்றது என்று கேட்டால், அது தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து, தங்கள் அவயவங்களையும் இழந்து, தங்களது குடும்பங்கள், உறவுகள், கல்வியைத் தள்ளிவைத்துவிட்டு ஓர் இலக்குக்காகத் தங்கள் உயிர், உடல், ஆவி அனைத்தையும் கொடுக்க முன்வந்தவர்களை விட வேறு எவருக்கும் அதைவிடக் கூடிய தகுதி இருக்க முடியாது.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற முன்னாள் போராளிகளுடனான சந்திப்பின்போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், கட்சியின் முக்கிய பிரமுகர் சட்டத்தரணி சயந்தன் உட்படப் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அங்கு சுமந்திரன் மேலும் பேசியதாவது:-

“இலங்கைத் தமிழரசுக் கட்சி 77 ஆவது ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவு தினம் ஏப்ரல் 26 அன்று வருகின்றது. 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் திகதி அவரது நினைவுப் பேருரையை வழங்கியபோது நான் சொன்ன ஒரு கருத்தை இங்கே மீண்டும் சொல்ல விரும்புகின்றேன்.

பாகிஸ்தானில் முகமது அலி ஜின்னா, வங்காளதேசத்தில் முஜிபுர் ரஹ்மான் போன்றோரை அந்தந்த நாடுகள் ‘தேசத் தந்தை’ என்று அழைப்பார்கள். இதற்கான காரணம், ‘நாங்கள் ஒரு தேசம்’ என்ற கருத்தை விதைத்தவர்கள்தான் அந்தத் தேசத்தின் தந்தை ஸ்தானத்தைப் பெறுகின்றனர்.

1949ஆம் ஆண்டு பிரஜா உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, இலங்கையிலே வாழ்கின்ற தமிழ் பேசுகின்ற மக்கள் ஒரு தனித்த தேசம் என்றும், சர்வதேச சட்டத்தின்படி சுயநிர்ணய உரிமை உள்ள ஒரு மக்கள் இனம் என்றும் அடையாளப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட கட்சியே இலங்கைத் தமிழரசுக் கட்சி. இதுதான் தமிழ்த் தேசியத்தின் அடித்தளம்.

அண்மையில் நானும் சட்டத்தரணி சயந்தனும் இந்திய சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பின் பேரில் புதுடில்லியில் சில கூட்டங்களில் பங்கேற்றோம். அப்போது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ‘முகம் இல்லாத மனிதர்கள்’ எனும் திரைப்படம் திரையிடப்பட்டது. ஏறத்தாழ 30 ஆண்டுகள் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்க்கை தொடர்பான திரைப்படம் அது.

திரைப்படம் நிறைவுபெற்றதும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவி கனிமொழி உரையாற்றினார். அவர் பேசும்போது, “சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் 1949ஆம் ஆண்டு இலங்கையிலே நாடற்றவர்களாக்கப்பட்டவர்களில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்னமும் இந்தியாவில் உள்ளனர். அவர்களைப் பயன்படுத்தி, தற்போது இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்குப் பிரஜா உரிமை வழங்க ஒன்றிய அரசை வற்புறுத்துகின்றோம்” என்றார்.

நான் பேசும்போது, “இலங்கையிலே தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகின்றது. ஆகையினாலே அங்கே இருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வர வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். ஆனால், நீண்ட காலமாக இந்தியாவில் வாழும் காரணத்தாலும், வயது மூப்பு மற்றும் பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்ற காரணங்களாலும் வர விருப்பம் இல்லாதவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. நாடு அற்றவர்களாக எவரும் இருக்கக் கூடாது என்பது சர்வதேச சட்டம். எனவே, திரும்பி வர விருப்பம் இல்லாதவர்களுக்கு இந்தியாவிலேயே குடியுரிமை வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினேன்.

1949ஆம் ஆண்டு 8 இலட்சம் மக்கள் நாடற்றவர்களாக்கப்பட்டபோது அதற்கு எதிராக உருவானதுதான் இந்தக் கட்சி. நாங்கள் ஒரு தேசம், எங்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு என்று சொன்ன முதலாவது கட்சி இதுதான். எங்களுடைய தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்த 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் இலக்கு ஒன்றுதான். அந்தப் போராட்டத்தின் இலக்கை அடைய இந்தக் கட்சியில் இணைய உங்களுக்கு முழு உரிமை உண்டு. எமது கட்சியில் வந்து சேர எவருக்கு அதிகூடிய தகுதி இருக்கின்றது என்று கேட்டால், அது தங்களை முழுமையாகத் தியாகம் செய்த முன்னாள் போராளிகளுக்கே உண்டு.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular