Homeஉள்நாடுமட்டக்களப்பில் யானை அட்டகாசம்! வயோதிபப் பெண் பரிதாப மரணம்!!

மட்டக்களப்பில் யானை அட்டகாசம்! வயோதிபப் பெண் பரிதாப மரணம்!!

மட்டக்களப்பு மாவட்டம், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்த காட்டு யானை ஒன்று, மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளது.

இந்த யானையின் தாக்குதலில் சிக்கி அதே கிராமத்தைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.

அதிகாலை வேளையில் வீடுகளில் அன்றாட வேலைகளில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீதே யானை தாக்கியுள்ளது.

முனைக்காடு, மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த 74 வயதுடைய கதிர்காமத்தம்பி சிவபாக்கியம் என்பவரே இவ்விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும், 44 வயதுடைய அருள்சிவம் கோமதி மற்றும் 62 வயதுடைய ஞானசீலன் அருளம்மா ஆகிய இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பின் எல்லைக் கிராமங்களில் நீண்டகாலமாக அச்சுறுத்தல் விடுத்து வரும் காட்டு யானைகள், தற்போது மட்டக்களப்பு நகர்புறம் உள்ளிட்ட கரையோரப் பகுதிகளையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன.

எனவே, ஒட்டுமொத்த மாவட்டத்தையும் அச்சுறுத்தி வரும் இந்தக் காட்டு யானைகளின் தொல்லைக்கு நிரந்தரத் தீர்வு காண உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular