Homeஉலகம்பாகிஸ்தானின் 3 விமான தளங்களை இந்தியா தாக்கியதாக தகவல்!

பாகிஸ்தானின் 3 விமான தளங்களை இந்தியா தாக்கியதாக தகவல்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பாகிஸ்தானில் அமைந்துள்ள மூன்று விமான தளங்களை ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் வானூர்தி ஆணையம் இன்று மாலை 4 மணி வரை தாக்குதலுக்கு உள்ளான விமான தளங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களாக எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் தரப்பு, இந்திய பகுதிகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு கருதி இந்தியாவில் எல்லையோர மாநிலங்களில் உள்ள 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மே 15 வரை இந்த விமான நிலையங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நகரங்களுக்கான விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று (மே 10) அதிகாலை 3.15 மணி முதல் மாலை 4 மணி வரை பாகிஸ்தானில் அமைந்துள்ள தாக்குதலுக்கு உள்ளான மூன்று விமான தளங்களும் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் செயலுக்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுத்து வருவதாகவும் அந்த நாட்டு ஊடக நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் இஸ்லாமாபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி, “இந்திய போர் விமானங்கள் மூலம் வானில் இருந்து தரையை தாக்கும் ஏவுகணைகள் கொண்டு இந்த தாக்குதல் நடைபெற்றது. இருப்பினும் இதனால் விமானப் படையின் சொத்துகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. ராவல்பிண்டியில் உள்ள நூர்கான், சக்குவால் பகுதியில் உள்ள முரித், ஜாங் மாவட்டத்தில் உள்ள ரஃப்பிகி விமான தளங்களை இந்தியா தாக்கியது” என கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 22-ஆம் திகதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

வியாழக்கிழமை இரவு இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது. அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை இரவும் பாகிஸ்தானின் 400 ட்ரோன்களை வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி -இந்து

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular