எந்த நோக்கத்துக்காக வடக்கு மீனவர்களை சீனா நாடி வருகின்றது? இந்தியாவுடன் நாம் முரண்பட வேண்டும் என்ற சிந்தனை ஏற்படுத்தப்படுகின்றது. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை வாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இந்திய இழுவைப்படகு வருவதை வைத்துக்கொண்டு இந்தியாவுடன் நாம் முரண்பட வேண்டும் என்ற சிந்தனை ஏற்படுத்தப்பட்டுவருகின்றது. அதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
சீன எந்த நோக்கத்தோடு வடக்கில் எமது மீனவர்களை நாடுகின்றது? இதில் என்ன இலாபம் அவர்களுக்கு இருக்கின்றது?
சீனாவின் ஆக்கிரமிப்பதென்பது நிலங்களை கைப்பற்றுவது, வளங்களை பயன்படுத்துவதுதாக உள்ளது.
மன்னாரில் இருந்து இராமேஸ்வரத்துக்கு 35 கிலோமீற்றர் தூரம்தான் உள்ளது. படகு சேவை ஆரம்பிப்பதற்கும், பாதை போடுவதற்கும் இந்தியா முயற்சித்துவருகின்றது. எனவே, அதைமீறி வேறு எவரும் மூக்கை நுழைப்பதற்கு இடமளிக்கமாட்டோம்.
எமது மீனவர்களுக்கு சீனா வழங்கிய அரிசியை பயன்படுத்த முடியவில்லை. மக்கள் அதனை கோழிகளுக்குதான் போடுகின்றனர்.
அதேவேளை மீனவர் பிரச்சினை சம்பந்தமாக தமிழக முதல்வர் மற்றும் இந்திய நடுவன் அரச தரப்பினருடன் பேச்சு வார்த்தைக்கு எற்பாடு செய்யுங்கள். எமது மக்கள் சார்பில் நாமும் பங்கேற்கின்றோம்.” – என்றார்.
