HomeTop newsதெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ கொழும்பு துறைமுக நகரில்

தெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ கொழும்பு துறைமுக நகரில்

தெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ (Air Dome) கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில் நிறுவப்பட்டுள்ளது.

4,000 பேர் வரை பங்கேற்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விசேட உள்ளக நிகழ்வு வளாகம், டிசம்பர் மாத இறுதிக்குள் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இது முழுமையாகச் செயற்பாட்டிற்கு வருவதற்கு முன்னர் மேலும் சில சிவில் கட்டுமானப் பணிகள் நிறைவடையவுள்ளன.

மாநாடுகள், கண்காட்சிகள், வர்த்தக சந்திப்புகள் மற்றும் பாரியளவிலான நிகழ்வுகளை நடத்துவதற்கு இந்த வளாகம் பயன்படுத்தப்படவுள்ளதாக ‘சீ.எச்.ஈ.சி. போர்ட் சிட்டி கொழும்பு’ (CHEC Port City Colombo) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், காணி அபிவிருத்தி மற்றும் விற்பனைப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளருமான சலக்க விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

துபாய் உள்ளிட்ட சர்வதேச நகரங்களிலுள்ள இவ்வாறான வசதிகளை முன்மாதிரியாகக் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிரந்தர மாநாட்டு மற்றும் கண்காட்சி மையம் உருவாக்கப்படும் வரை, இந்த ‘எயார் டோம்’ வளாகம் இடைக்கால வசதியாகப் பயன்படுத்தப்படவுள்ளது.

திட்டமிடப்பட்டுள்ள நிரந்தர மையத்தில் 4,000 பேர் பங்கேற்கக்கூடிய உள்ளகப் பலநோக்கு மண்டபம் ஒன்றும், வெளிப்புறத்தில் 5,000 பேருக்கு வசதிகள் செய்துகொடுக்கக்கூடிய வளாகமும் உள்ளடக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த மையத்துக்கு அண்மையில் 400 முதல் 450 வரையிலான அறைகளைக் கொண்ட நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் கொழும்பு துறைமுக நகரின் பிரதான திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எயார் டோம் (Air Dome) என்பது தூண்கள் அல்லது சுவர்கள் இன்றி, தொடர்ச்சியாகச் செலுத்தப்படும் காற்றின் அழுத்தத்தால் தாங்கிப் பிடிக்கப்படும் ஒரு பிரம்மாண்டமான, பலமான துணியாலான கட்டமைப்பாகும். இதை மிக விரைவாகவும் குறைந்த செலவிலும் அமைக்க முடியும் என்பதால், நிரந்தரக் கட்டடங்கள் உருவாகும் வரை மாநாடுகள், கண்காட்சிகள் மற்றும் பெரிய நிகழ்வுகளை நடத்த இடைக்கால வசதியாகப் பயன்படுத்துகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular