சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை காவி உடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வைத்தியர் பி.ஏ. ரத்னபாலவினால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு மீதான விசாரணை நிறைவடைந்து இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை, ஞானசார தேரரை சாதாரண உடை அல்லது சிறைச்சாலைச் சீருடையில், கைவிலங்கிட்டு ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்துவதைத் தடை செய்யுமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.
மேலும், சிறைச்சாலை விதிகளின் 156(2) ஆம் பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள வரம்புகளை மீறி, ஞானசார தேரரின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவு செய்தல், அவற்றைப் பகிர்தல் அல்லது அவ்வாறான நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குதல் ஆகியவற்றைத் தடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
