எண்ணெய் மீதான வரியை தற்போதைய வரி அளவைவிட அரசாங்கம் அதிகரித்துள்ளதால், அதன் சுமையை இறுதியில் பொதுமக்களே சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ச,
ஒருபுறம் வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. மறுபுறம், எரிபொருளுக்கு சிறிய அளவிலான நிவாரணம் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, எண்ணெய் மீதான வரியையும் அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
கப்பலில் இருந்து இறக்கப்படும் எரிபொருளின் அளவுக்கு ஏற்ப கட்டணங்கள் அறவிடப்படுவதாகவும், தரகுக் கட்டணங்களும் வசூலிக்கப்படுவதாகவும் அரசாங்கம் கூறுகின்றது. இந்நிலையில், குறைந்தபட்சம் எரிபொருள் மீதான வரியையாவது அரசாங்கம் குறைக்க வேண்டும். எரிபொருள் மீதான வரியை ஓரளவிற்கேனும் குறைப்பதே நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கையாகும். அதுவே மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியாகவும் இருந்தது.
ஆனால், தற்போதுள்ள வரி அளவைவிட அதிகமான வரியை எரிபொருள் மீது விதித்துள்ளதால், அதன் இறுதிச் சுமை பொதுமக்கள் மீதே சுமத்தப்படுகின்றது.
பால் மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இவை அனைத்தும் மக்களின் வாழ்க்கைச் செலவை மேலும் உயர்த்தியுள்ளன. அதேவேளை, மக்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்படவில்லை.
அரசாங்க அமைச்சர்களின் கருத்துப்படி, தற்போது எரிவாயு வரிசைகள் இல்லை எனக் கூறப்படுகின்றது. ஆனால், கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று பார்த்தால், மக்கள் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகள் தொடர்பில் தொடர்ந்து பேசுவதை அவதானிக்க முடிகின்றது.
அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ள நிலையில், இதற்கான அரசாங்கத்தின் தீர்வு என்ன? மீண்டும் புதிய வரிகளை விதிப்பதா? அல்லது திருடர்களைப் பிடிப்பதாகக் கூறி விசாரணைகளை முன்னெடுப்பதா? மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அரசாங்கத்திடம் என்ன திட்டம் உள்ளது?
பொய்யான ஆதாரங்களை உருவாக்கி எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும், தற்போது அந்த நடவடிக்கைகள் பொதுமக்களையும் பாதிக்கும் நிலையை எட்டியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், நாட்டில் குறைந்தபட்ச பொருளாதார வளர்ச்சியைக் கூட ஏற்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும், அரசாங்கத்திற்குள் பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் வேறு ஒருவரை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்றுவரை நாட்டின் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கோ, மக்களின் வாழ்க்கைச் செலவைத் தாங்கக்கூடிய அளவிற்குக் குறைப்பதற்கோ, பாடசாலை மாணவர்களின் கல்விச் செலவைக் குறைப்பதற்கோ அல்லது உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கோ அரசாங்கம் வெற்றிகரமான திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் பணவீக்கம் 8 சதவீதத்தைக் கடந்துள்ளதாகவும், அது ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.
