செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் தனது முதலீடுகளைத் தீவிரப்படுத்தி வரும் கூகுள் நிறுவனம், செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஐந்து நாடுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா செய்வதற்கான நிதி ஊக்கத்தொகைத் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.
இதன்படி, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பணியாற்றும் தகுதியான ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கட்டாய ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலாக, விருப்பமுள்ள ஊழியர்கள் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்டு நிறுவனத்திலிருந்து வெளியேறுவதற்கு இந்தத் திட்டம் வழிவகுக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், வெளியேற விரும்பும் தகுதியான ஊழியர்களுக்கு அவர்கள் நிறுவனத்தில் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு மாதச் சம்பளம் வீதம் இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
எனினும், அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை 12 மாதச் சம்பளத்திற்கு வரையறுக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர் ஒருவர் இந்தத் திட்டத்தின் கீழ் வெளியேறினால், அவருக்கு ஐந்து மாதச் சம்பளம் இழப்பீடாக வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த ஊழியர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நிறுவனத்திலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கூகுளின் இந்த விருப்ப வெளியேற்றத் திட்டத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமானதாகக் கருதப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிப் பிரிவான டீப்மைண்ட் (DeepMind) மற்றும் கூகுள் கிளவுட் (Google Cloud) ஆகிய பிரிவுகள் இத்திட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரிலுள்ள முக்கிய பொறியியல் மையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் தொழில்நுட்பத் துறைகளில் புதிய பணியாளர்களைத் தொடர்ந்து இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கூகுளின் நிதித்துறைத் தலைவர் அனாத் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் முதலீடுகளை அதிகரித்து வரும் அதேவேளை, நிறுவனத்தின் ஏனைய பிரிவுகளில் செலவுகளைக் கட்டுப்படுத்தும் கூகுளின் இந்த நடவடிக்கை சர்வதேச தொழில்நுட்பத் துறையில் கவனத்தை ஈர்த்துள்ளது.
