HomeTop newsவங்காள விரிகுடாவில் உருவானது முரசு புயல் - வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவானது முரசு புயல் – வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அண்மைய வளிமண்டலவியல் அறிவித்தலின்படி, மத்திய மேற்கு மற்றும் அதனை அண்மித்த வங்காள விரிகுடா கடற்பகுதியில் தற்போது முரசு புயல் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக, குறித்த கடற்பகுதிகளில் மிக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் கடல் அலைகள் மேலெழுவதன் காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கற்பிட்டியிலிருந்து மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான வடக்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறிய படகுகள் மறுஅறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது அப்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறிய படகுகள், நிலவும் பலத்த காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பாதுகாப்பாக தொழிலில் ஈடுபட்ட முடியாத அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கோ அல்லது மீண்டும் கரைக்கோ திரும்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஏனைய பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களும் தமது பகுதிகளில் நிலவும் காற்றின் நிலை மற்றும் கடல் அலைகளின் தன்மை குறித்தும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

அத்துடன், கடலுக்குச் செல்லும்போதும், மீன்பிடியில் ஈடுபடும்போதும், திரும்பும்போதும் உயிர் காக்கும் அங்கிகளை (Life jackets) அத்தியாவசிய உபகரணங்களாகக் கருதி கட்டாயமாக அணிந்து செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலைமை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தினால் இனிவரும் நாட்களில் வெளியிடப்படும் வானிலை அறிவித்தல்கள் குறித்து மீனவ சமூகத்தினர் தொடர்ச்சியாக அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்கள் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular